நமது லைஃப் ஸ்டைல் Inflation சரியாக உள்ளதா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

அநேக இந்தியர்களின் தற்போதைய பேசுபொருள் தேசத்தின் பணவீக்கம் பற்றித் தான். தேசத்தின் மட்டும் அல்ல கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்துமே தற்போது பணவீக்கத்தைக் கண்டு அஞ்சி வருகின்றது. இத்தகைய சூழலில் ஒரு சராசரி மனிதனாக நாம் என்ன செய்து விட முடியும். நம்மால் நாட்டின் வங்கி மற்றும் நிதி சார்ந்த கொள்கைகள் எதையும் மாற்றி விட முடியாது. ஆனால் விரலைக் கடித்துக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு மற்றும் எதிர்பாராத பணவீக்கம் நமது கையை கடிக்கத் துவங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆம், தனி நபராக நிச்சயம் நம்மால் சிறிதளவு சமாளிக்க முடியும் நம்முடைய Lifestyle inflation சரியாக இருந்தால். அதென்ன Lifestyle Inflation?

Representational Image

முந்தைய ஒரு வருடம் / ஐந்து அல்லது பத்து வருடம் தான் செய்த தனிமனித செலவை / செலவின் போக்கை அல்லது செலவின் மூலத்தை ஒருமுறை நீங்கள் ஆராய்ந்து கணக்கிட்டுப் பார்த்தால் அதன் வளர்ச்சி/வித்தியாசம் உங்களுக்கே வியப்பு அளிக்கும். அதற்குப் பெயர் தான் ஆங்கிலத்தில் Lifestyle Inflation என்பார்கள். இன்னும் எளிமையாக கூற வேண்டும் என்றால் சில உதாரணங்களோடு கூறலாம்.

தேவைக்கு மட்டும் செலவழிக்கும் நாம், நமது சம்பளம் அல்லது தொழில்/வேலை உயரும்போது முறையான செலவுப் பழக்கங்கள் இல்லாமல் தடுமாறுகிறோம். “நாம கஷ்டப்பட்டு உழைக்கிறதே நல்லா வாழத் தானே” என்ற எண்ணம் மேலோங்கி நமது சிக்கன மனப்பான்மையை புதைத்து விடுகிறது.

2014ல் நான் முதல் மாத சம்பளம் வாங்கியபோது பார்த்து பார்த்து செலவு செய்வேன். உணவு,உடை,உறைவிடம், பொழுதுபோக்கு என எல்லாம் சேர்த்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு ரூபாய் ₹7,000 முதல் ₹8,000 வரைக்குள் செலவை சமாளித்தேன். இன்று 2022ல் ஒரு மாதத்திற்கு பெட்ரோல் செலவிற்கு மட்டுமே ₹7,000 ரூபாய் வரை செலவு செய்ய நேரிடுகிறது.

பெட்ரோல்/டீசல் விலை ஏற்றம் ஒருபுறம் இருந்தாலும் நாம் வெளியில் காரணமே இல்லாமல் Stress Buster என்ற பெயரில் Weekend Outing / Night Out போன்ற Jargons நிறைந்த சூழலில் சிக்கிக்கொண்டதும் ஒரு காரணமே. முன்பெல்லாம் மாதத்தில் ஒரு weekend மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது எல்லா வார இறுதியும் வருகின்றது. பக்கத்து கடைக்குக் கூட பல்சர் தேவைப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு வாரம் இரு முறை Public Transport இல் சென்று வரலாம். பக்கத்து கடைகளுக்கு நடந்து சென்று வரலாம். தொலைவான outing இல்லாமல் அருகில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் நேரம் செலவழிக்கலாம்.

Representational Image

நான் பணியில் சேர்ந்த பொழுதில் எங்கள் அலுவலகத்தில் இலவச டின்னர் கொடுப்பார்கள். மாலை ஏழு மணிக்கே வேலை முடிந்தாலும் , கூடுதல் இரண்டு மணி நேரம் ரொம்ப சின்சியரா வேலை பார்த்து, காத்திருந்து இரவு ஒன்பது மணிக்கு தரும் நாற்பது ருபாய் Free Food Pass யை வாங்கி டின்னர் சாப்பிட்டு காசு சேமிப்போம். இன்று அதே இரவு உணவு எங்கெல்லாம் variety யாக கிடைக்கிறது என்று தேடி அதிக விலை என்றாலும் சுவைத்து பார்த்து விடலாம் என்று எண்ணி டிப்ஸ் மட்டுமே 20 ரூபாய் கொடுத்து சாப்பிடும் அளவுக்கு மனது மாறி இருக்கிறது. அதுவே வளர்ச்சி என்று பொய்யாக எண்ணவும் வைத்திருக்கிறது. போதாக்குறைக்கு நாம் சும்மா இருந்தாலும் இந்த டிஜிட்டல் mode நம்மை பல வகையான ஆப்களின் (App) மூலம் நம்மை வெவ்வேறு Hotel களுக்கு virtual ஆக இழுத்துச் செல்கிறது. இதே டிஜிட்டல் யுகத்தை குறை கூறாமல் மாறாக இந்த தளத்தில், தாங்களே தனக்கு விரும்பிய உணவை எப்படி செய்து சாப்பிடலாம் என்று கற்றுக்கொள்ளலாம். நமக்கு தெரிந்த புதிய ரெசிபியை நமது Youtube இல் பகிர்ந்து கொண்டு பணம் ஈட்டலாம். Insta / Facebook மூலம் ஒரு சிறிய உணவு பகிர்மான தொழில் செய்ய முற்படலாம்.

உயர்தர Mall சென்று பார்க்கிங் கட்டணம் கொடுத்து, விளையாட கட்டணம் கொடுத்து, ப்ளே ஸ்டேஷனில் (Play Station) உங்கள் குழந்தை விளையாடினால் மட்டுமே அது entertainment என்று இல்லை. பீச்சுக்கு சென்று இலவச காற்று வாங்கி கடற்கரை மணலில் விளையாடினால் கூட Entertainment தான். அதில் பெறக்கூடிய உடற்பயிற்சியும் புத்துணர்ச்சியும் ஏராளம்.

தன் வருமானத்தை எவ்வளவு உயர்த்துகின்றோமோ அதே அளவிற்கு தன் செலவையும் உயர்த்தினால் இறுதியில் மிஞ்சுவது ஒன்றுமில்லை. சொந்தமாக கார் வாங்கி அதில் Tour / Vacation சென்றால் தான் இன்பம் என்றில்லை. இரயில் பயணத்தில் கூட நாம் பல்வேறு சுவாரஸ்யங்களை காண இயலும். No driving tension ,அதிக Family time spending மற்றும் குழந்தைகளின் Excitement இப்படி பலவற்றை கூறலாம்.

Representational Image

இப்படி நம் வருமானம் நூறு சதவீதம் உயரும் போது செலவின் ஸ்டைல் கூடவே நூறு சதவீதம் உயர்ந்து விடாமல் 20 சதவீதம் இருக்குமாறு நமது Lifestyle Inflation யை தக்க வைத்துக் கொண்டால் ஓரளவு நாம் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பலாம். அதற்காக முற்றும் துறந்த முனிவர் போல கஞ்சத்தனமான பழைமைவாசியாய் வாழ வேண்டும் என்று அர்த்தமில்லை. அளவாய் அனுபவித்து சரியான திட்டமிடலோடு நமது பொருளாதார சுதந்திரத்தை தேர்ந்தெடுப்போம்.

ச. காந்திமதிநாதன்
திருநெல்வேலி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.