தொழிற்சங்கங்கள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கோரிய சர்வகட்சி வேலைத்திட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் அடங்கியுள்ளதாக அவைத் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (10) தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று (10) இரண்டாவது நாளாக நடைபெற்ற போது
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் உள்ள மாற்றத்தை நாம் உணர வேண்டும். அந்த மாற்றத்திற்கு தேவையான பரிகாரங்கள் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக இளம் ஆர்ப்பாட்டக்காரர்களின் குரலுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். நாட்டினுள் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது மக்கள் புதிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மக்களுக்கு போராட்டங்கள் போதும் என்ற நிலையுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்று தனது உரையின் போது சுட்டிக்காட்டினார்.
கோட்டாபய ராஜபக்ஷ நெருக்கடிகளை சரியாக அடையாளம் காண தவறிவிட்டார். நெருக்கடிக்கு குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களும் கோட்டாபய ராஜப க்க்ஷவிடம் இருக்கவில்லை.
2019 இல் இருந்தே அரசியல் புதியவர்கள் தெரிவாக வேண்டும் என்ற போராட்டம் ஆரம்பமாகியது. அதன்படியே எதிர்பார்ப்புகளுடன் வீதிகளில் சித்திரங்களை வரைந்தனர்.
அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வில்லை போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏப்ரல் 09 ஆம் திகதி போராட்டம் இவ்வாறான நெருக்கடியுடனேயே ஆரம்பமாகியது.
போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இப்போது மக்களுக்கு போராட்டங்கள் போதும் என்ற நிலை வந்து விட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது மக்கள் புதிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டங்கள் தொடரலாம். நான் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினராகவே உள்ளேன் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்
இதேவேளை, பாராளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி சபையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாட்டுக்கு புதிய ஆரம்பம் தேவை என்றும் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு தமது கட்சி சாதகமான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 75வீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இச் சந்தர்ப்பத்தில் இந்தளவு பாரிய தொகை மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டால் மக்கள் எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்வது. அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு சபை அனுமதி வழங்க வேண்டும்.அதற்கிணங்க விவாதம் முடியும் வரை மின்சார கட்டண அதிகரிப்பை இடை நிறுத்தவேண்டும் .
அத்துடன், 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துமாறும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் எரையாற்றுகையில் , ஜனாதிபதியின் பதவியேற்பு உரையில் அடங்கிய எதிர்க்கட்சிகள் பல விடயங்களை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். சமூகத்தில் அரசியல்வாதிகள் மீது வெறுப்பு நிலவுவதாகவும், அதற்கான காரணங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன், நாட்டுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். அவற்றை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஸ்ணன் உரையாற்றுகையில் இ அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு உதவத் தயாராக இருப்பதாகவும், நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது எனபாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி ஒருவர் என்பது சகலரும் அறிந்ததே.
இலங்கையராக அனைவரும் ஒன்றினைந்து வாழ வேண்டும் என குறிப்பிட்டாலும் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தமிழ் பேசும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை. விரும்பினாலும், விரும்பாவிடினும் பெரும்பான்மையாளரில் ஒருவரை தலைவராக தெரிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எமது மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேரதலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைப்பாடு இருந்தது.
2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். அதே போலதான் தொடர்ச்சியாக தேர்தலில் இரு வேட்பாளர்களின் எவர் சிறந்தவர் என ஆராய்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.
இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை இல்லாதொழித்துள்ளார்கள்.
தமிழ் சமூகம் பொருளாதாரம் மாத்திரமல்ல அதற்கு அப்பாற்பட்ட பல இன்னல்களை எதிர்க்கொண்டுள்ளது. அவசரகால சட்டத்தை கொண்டு தற்போது தெற்கில் கைது இடம்பெறுகிறது. நாங்கள் 1979ஆம் ஆண்டு முதல் அவசரகால சட்டத்தை எதிர்த்து வருகிறோம்.
அவசர கால சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்தரப்பினர் குரல் கொடுக்கிறார்கள்.தமிழ் மக்கள் அவசரகால சட்டத்தினால் பல இன்னல்களை அனுபவித்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை.
தொடர்ச்சியாக தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவில்லை
வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை, மறுபுறம் விவசாயிகளும் உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் வழங்கப்பட்ட அரச தொழில் நியமனத்தில் தமிழ் பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. ஆகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காத தலைவர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.