நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்; பொது போக்குவரத்து வாகனங்களை மட்டும் பயன்படுத்துங்கள்: அரசு, சொந்த வாகனங்களை தவிர்க்க டெல்லி போக்குவரத்து துறை உத்தரவு

புதுடெல்லி: பணி நிமித்தமான பயணம் மற்றும்  பணிக்கு வந்து செல்லும் பயணம் என அனைத்துக்கும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள், வாடகை வாகனங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை மட்டும் பயன்படுத்துங்கள் என டெல்லி போக்குவரத்து துறை, தனது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மாநில போக்குவரத்து துறை தற்போது தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போக்குவரத்து துறையின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள், நகரில் அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றன.இந்த நடைமுறையில் பணி நிமித்தம் அரசு வாகனங்களில் செல்லும் போக்குவரத்து துறைக்கு சொந்தமான ஜீப் மற்றும் கார்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநில போக்குவரத்து துறை இணை கமிஷனர் நவ்லேந்திர குமார் சிங் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: விதிமுறைகள் அனைவருக்கும் பொருந்தும். போக்குவரத்து நெரிசல்களால் அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். போக்குவரத்து துறையின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள், முறையற்ற செயல்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றன. இதனால் ஓரளவுக்கு வாகன நெரிசலை குறைக்க முடிகிறது.எனவே போக்குவரத்து துறையின் ஊழியர்களும், அதிகாரிகளும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். பணி நிமித்தமாக வேறு இடங்களுக்கு செல்லும் போது, அரசு வாகனங்களை பயன்படுத்த வேண்டாம். வாடகை வாகனங்களையே பயன்படுத்த வேண்டும். அதே போல் பணிக்கு வரும் போதும் உங்கள் சொந்த வாகனங்களில் வர வேண்டாம். அரசு போக்குவரத்து கழக பஸ்கள், வாடகை ஆட்டோக்கள் அல்லது வாடகை கார்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இதன் மூலம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நாம் தவிர்க்க முடியும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே, டெல்லியில் டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கான விதிமுறைகளை எளிதாக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட இருந்தது. ஆனால் ஏற்கனவே தினமும் ஆயிரக்கணக்கானோர் டிரைவிங் லைசன்ஸ் பெற்று வரும் நிலையில், இதற்கான விதிமுறைகளை மேலும் எளிதாக்கினால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இந்த நடைமுறையை அமல்படுத்தும் திட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.