புதுடெல்லி: பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துகள் நாடு முழுவதும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. ஆனால், நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த உதய்ப்பூர் தையல் தொழிலாளி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதற்கிடையில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நுபுர் சர்மா மீது வழக்குகள் தொடரப்பட்டன.இந்நிலையில் தன் மீது நாட்டின் பல மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்கை டெல்லிக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நுபுர் சர்மா ஒரு மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், நுபுர் சர்மா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும், நுபுர் சர்மாவை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையும் விதித்திருந்தது.
இந்நிலையில் நுபுர் சர்மா தொடர்ந்து வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நுபுர் சர்மாவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீஸுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.