மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மற்றும் அவுரங்காபாத்தில் இரும்பு, துணி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரபலமான இரு தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறையின் நாசிக் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. உடனே வருமான வரித்துறை அதிகாரிகள் 260 பேர் 5 குழுக்களாக பிரிந்து அவுரங்காபாத், ஜல்னா உட்பட இடங்களில் ஒரே நேரத்தில் மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் அத்தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். இம்மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய ரெய்டு 8ம் தேதி வரை நீடித்தது. ரெய்டில் ரூ.390 கோடிக்கு கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெய்டில் ரொக்க பணம் மட்டும் 58 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர 32 கிலோ தங்கமும் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணி முடிக்கவே 13 மணி நேரம் பிடித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.14 கோடி மதிப்புள்ள வைரம் மற்றும் பவளமும் இந்த ரெய்டில் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரு தொழில் நிறுவனங்களில் ரெய்டு நடத்த 120 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 100 கோடி ரூபாய் மதிப்பு பினாமி சொத்து ஆவணங்களும் ரெய்டில் பிடிபட்டுள்ளது. ரெய்டு நடத்தப்பட்ட இரு தொழிலதிபர்களும் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தலா ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கி இருக்கின்றனர். அதோடு ரெய்டில் சிக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் பாஜக-வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதனால்தான் அத்தொழிலதிபர்களின் பெயர்களை வருமான வரித்துறையினர் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.