கோயில் விழா, இலக்கிய விழா, சினிமா விழா, அரசியல் விழா என தினந்தோறும் திருவிழாக்களால் களைகட்டும் மதுரையில், ஹோட்டல்களும் உணவு படைப்பதை திருவிழாபோல கொண்டாடுகின்றனர்.
இதன் காரணமாக சுவையான உணவைத்தேடி வெளியூர் மக்கள் மதுரைக்கு சுற்றுலாவே வந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
வெளியூர், உள்ளூர் மக்கள் என்ற பேதமில்லாமல் வெரைட்டியான உணவுகளை தயாரித்து வழங்குவதில் மதுரையிலுள்ள ஹோட்டல்கரர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அனைத்து வகையான மக்களையும் ஈர்க்கும் வகையில் மதுரையில் பிரபலமான ‘ஹோட்டல் கோர்ட் யார்ட் இன் மேரியாட்’, சௌராஷ்டிரா உணவுத்திருவிழாவை வருகின்ற 12-ம் தேதி முதல் தொடங்குகிறது.
மதுரையில் வாழுகின்ற பல்வேறு கலாசார பின்னணி கொண்ட மக்களின் பாரம்பர்ய முறையில் மிருதுவாகவும் காரசாரமாகவும் சைவ-அசைவ உணவுகள் கிடைத்து வருகிறது.
அதில் சௌராஷ்டிரா மக்களின் உணவுப் பாரம்பரியம் தனித்த அடையாளமுள்ளது. வெரைட்டி ரைஸ் முதல் பிரைடு ரைஸ் வரை வித்தியாசமான சுவையில் அசத்துவார்கள்.
வெளியில் அறியப்படாத அவர்கள் உணவு வகைகள் ஏராளம் உள்ளன. அவற்றை இந்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் சௌராஷ்டிரா உணவுத்திருவிழா நடைபெற உள்ளது.
அதற்கு முன்னோட்டமாக ஹோட்டல் கோர்ட் யார்ட் இன் மேரியாட்டில் முக்கியமான உணவு சிலவற்றை காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
வெங்காயம், கொத்தமல்லி அதிகம் போட்ட சுவையான வெஜ் சூப், அருமையான டேஸ்டில் அம்பட் பாத் என்ற புளிச்சோறு, புவம் என்ற இட்லி மாதிரியான உணவு என எல்லாம் அசத்தல்.
சேப்பங்கிழங்கு பொடிமாஸ், பன் அல்வா, முள்ளங்கி குழம்புடன், அசைவத்தில் பொல்டே சைனா என்ற பெயரில் நம்ம ஊர் மட்டன் உப்புக்கறியை வேற லெவலில் செய்திருந்தார்கள். குடி வறுவல் என்ற சிக்கன் டிஷ்… இப்படி பல சௌராஷ்டிரா டிரடிஷனல் வெரைட்டிகளை அருமையாக செய்திருந்தார்கள்.
உணவுத்திருவிழா நடக்கும் நாளில் இன்னும் அதிகமான டிஷ்களை தயாரிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த உணவுகளை தயாரிக்க செஃப் விஜயராகவனுக்கு சௌராஷ்டிரா உணவு ஆர்வலர் அருணா ரமேஷ் உதவி செய்கிறார்.
சௌராஷ்டிரா சிறுகுறு தொழில் சங்கத்துடன் இணைந்து கோர்ட் யார்ட் ஹோட்டல் நடத்தும் உணவுத் திருவிழாவால் வரும் நாள்களில் உணவுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்.