சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கலைவாணி. இவர், புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். கலைவாணியின் மகள், முகப்பேர் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக மாணவி, பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் 10.8.2022-ம் தேதி வழக்கம் போல கலைவாணி வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். கலைவாணியின் சகோதரர் குணசேகரன் அன்றைய தினம் மாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. அதனால் கலைவாணிக்கு போன் செய்து விவரத்தை குணசேகரன் கூறியுள்ளார். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது துப்பட்டாவால் வீட்டின் ஹாலில் மாணவி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் அம்மா கலைவாணி, கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தது தெரியவந்தது. அதனால்தான் அவர், பள்ளிக்குச் செல்லாமல் விடுமுறையில் இருந்துள்ளார்.
வயிற்று வலி காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இருப்பினும் மாணவியின் மரணம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “பெண் காவலர் கலைவாணி, கடந்த சில ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து மகளுடன் தனியாக காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். கலைவாணியின் மகள், வயிற்று வலிக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்தச் சமயத்தில் கலைவாணியின் மகள் தற்கொலை செய்திருக்கிறார். அதனால் மாணவியின் தோழிகளிடமும் கலைவாணியிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப்பிறகு மரணம் தொடர்பாக கூடுதல் தகவல் கிடைக்கலாம் ” என்றனர்.