பாட்னா: குடியரசு துணை தலைவர் பதவி கனவு நிறைவேறாததால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் விமர்சனம் நகைப்புக்குறியது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாரதிய ஜனதா உடனான உறவு முறித்துக்கொண்டு நிதிஷ்குமார் ஆர்.ஜே.டி.யின் மகா கூட்டணியில் இணைந்து 8வது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனிடையே, நிதிஷ்குமாரின் விலகல் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட நிதிஷ்குமார் விரும்பியதாக தெரிவித்தார். இதுகுறித்து நிதிஷ் ஆதரவாளர்கள் பாஜக தலைவரிடம் தூது சென்றதாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது கூட்டணி முறிவுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நிதிஷ்குமார், குடியரசு துணை தலைவர் பதவிக்கு தாம் வர விரும்பியதாக பாரதிய ஜனதா கூறுவது நகைப்புக்குறியது என்று குறிப்பிட்டார். பாஜகவினர் நினைத்ததை எல்லாம் பேசி வருகின்றனர். குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு என்றுமே நான் ஆசைப்பட்டது இல்லை. இது முற்றிலும் தவறான தகவல் என்பது உங்களுக்கே தெரியும். இதில் துளியும் உண்மை கிடையாது. குடியரசு தலைவர், குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் எங்கள் கட்சி ஆதரவு அளித்ததை அவர்கள் மறந்து விட்டார்களா? என்று கேள்வி எழுப்பினார். என்னை விமர்சனம் செய்பவர்கள் செய்யட்டும். அப்போது தான் அவர்களுக்கு பாஜகவில் மீண்டும் பதவிகள் கிடைக்கும் என்றும் நிதிஷ்குமார் குறிப்பிட்டார்.