காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது எழுத்து மற்றும் பேச்சுக்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான லெஜியன் ஆஃப் ஹானர் விருதைப் பெற்றுள்ளார்.
திருவனந்தபுரம் மக்களவை தொகுதியை காங்கிரஸ் எம்பியான சசி தரூர் மிகச்சிறந்த எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் அறியப்படுகிறார். சிக்கலான பல ஆங்கில வார்த்தைகளை எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தி பலரது சிந்தனைக்கு தீனிபோடுவது அவரது இயல்பாகும். “இந்தியாவின் இருண்ட காலம் – இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம்” (An Era of Darkness: The British Empire in India) என்ற இவரது புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இது தவிர 23 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் அவையில் தூதராகவும் பணியாற்றிய அவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், வெளியுறவு துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.தற்போது திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான, “செவாலியர் டி லா லெஜியன் டி’ஹானூர்” (The Legion of Honour) என்ற விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பிரான்ஸ் உடனான உறவை போற்றும், அம்மொழியை நேசிக்கும், கலாச்சாரத்தை போற்றும் ஒருவனாக இவ்விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சியை பகிர்கிறேன். இந்த பெருமை மிக்க விருதை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என் நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Thanks. As one who cherishes our relations with France, loves the language and admires the culture, I am honoured to be recognized in this way. My gratitude & appreciation to those who have seen fit to award me this distinction. @FranceinIndia https://t.co/dyy6L1sQEO
— Shashi Tharoor (@ShashiTharoor) August 11, 2022
ஒரு நாட்டின் உயரிய விருதை சசி தரூர் வாங்குவது இது முதல் முறையல்ல! ஏற்கனவே ஸ்பெயின் நாட்டின் உயரிய விருதான “ என்கோமியெண்டா டி லா ரியல் ஆர்டர் எஸ்பனோலா டி கார்லோஸ் III (The Encomienda de la Real Order Espanola de Carlos III) என்ற விருதை அவர் 2010 ஆம் ஆண்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM