இன்று தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளி வளாகங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்டவற்றில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில், கரூரில் பள்ளி சீருடை அணிந்த சில மாணவிகள் போதை மயக்கத்தில் தடுமாறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கரூர் சர்ச் கார்னர் பகுதியில் மூன்று பள்ளி மாணவிகள் சீருடை அணிந்த நிலையில் நல்ல மதுபோதையில் நிலைதடுமாறி கொண்டு இருந்தனர்.
இதனை அப்பகுதியில் கடை வைத்திருந்த சிலர் கண்டு கொண்டனர். அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து அவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் வருவதை கண்ட ஒரு மாணவி ஓட்டம் பிடித்தார். ஆனால் மற்ற இரண்டு மாணவிகளால் இருந்து நகர முடியாத அளவிற்கு போதை இருந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் அருகில் சென்று பார்த்த போது அவர்கள் போதையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு பேரையும் ஆம்புலன்சில் வைத்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மூன்று மாணவிகளும் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிப்பதாகவும், இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய தோழிகள் என்றும் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மறுதேர்வு எழுத சீருடையில் பள்ளிக்கு வந்ததாகவும் தேர்வு எழுதிய மகிழ்ச்சியில் வெளிவந்த அவர்கள் ஒயின் குடித்தால் கலராக மாற்றலாம் என்று யாரோ கூறியதை கேட்டு டாஸ்மாக் கடையில் வாங்கி 3 மாணவிகளும் குடித்ததும் தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் வழக்கம்போல அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டபோது போதை தலைக்கேறி தடுமாறிக் கொண்டு இருந்தனர். தெரியாமல் தவறு செய்து விட்டோம் என்று போலீசிடம் அந்த மாணவிகள் அழுது புலம்பினர். தொடர்ந்து ஓட்டம் பிடித்த அந்த மாணவியையும் கண்டறிந்து 3 பேரின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.