மத்திய அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை டிசம்பர் 2024 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கோரிக்கையின் அடிப்படையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் டிசம்பர் 31, 2024 வரை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த திட்டத்தின் காலக்கெடு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
12 வயதில் 3 ஆப்… கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு!
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரிலான திட்டம் என்பது அனைத்து தகுதியான நகர்ப்புற பயனாளிகளுக்கும் குறைந்த விலையில் வீடுகளை வழங்குவதை நோக்கமாக கொண்ட திட்டம் ஆகும். அனைவருக்கும் வீடு என்று தமிழில் கூறப்படும் இந்த திட்டத்தில் தமிழகம் உள்பட பல மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர்.
சிறப்பு அம்சங்கள்
ஏழை எளியவர்களுக்கு மானியத்துடன் வீடு வழங்கும் இந்த திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் 2 கோடி வீடுகள் பயனாளிகளுக்கு கட்டி தருவதாக கூறப்பட்டிருந்தது.
வட்டி மானியம்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் சிறப்பு அம்சங்களாக 20 ஆண்டுகள் வரையான தவணை காலத்துடன் பயனாளிகள் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கிக்கொள்ளலாம். இதற்கு வரும் 6.5 சதவீதம் வட்டி மானியமும் உண்டு. ஆனால் ஒவ்வொருவரின் வருமானத்திற்கு ஏற்றபடி மானியம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
100 லட்சம் வீடுகள்
2017 ஆம் ஆண்டில் 100 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்ட நிலையில் இவற்றில் 62 லட்சம் வீடுகள் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சுமார் 40 லட்சம் வீடுகள் கட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் தாமதமாகி வருவதாகவும் அவற்றை முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும்” என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே தற்போது இந்த திட்டத்திற்கான காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மானியம் தொகை
மத்திய அரசு இந்த திட்டத்திற்காக 2004-2014ல் ரூ.20,000 கோடி உதவி செய்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் ரூ. 2.03 லட்சம் கோடியும், மார்ச் 31, 2022 வரை மத்திய அரசின் மானியம் ரூ.1,18,020.46 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.85,406 கோடி இன்னும் வழங்கப்படும் என்றும் மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளம் ஒதுக்கப்படும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும்.
தமிழகத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
இதுவரை இந்த திட்டத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் அடிப்படையில் 7 லட்சத்து 65 க்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திராவில் இந்த திட்டத்தின் கீழ் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆந்திராவை அடுத்து உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளது என்பதும், இந்த பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி
இந்த திட்டத்தில் வீடு பெறுவதற்கான தகுதி என்பது ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, திருமணமாகாத மகள்கள் அல்லது திருமணமாகாத மகன்கள் இருக்க வேண்டும் என்றும் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
Union Cabinet approves extension of PMAY-Urban till Dec 2024
Union Cabinet approves extension of PMAY-Urban till Dec 2024 | முடிந்த போன பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!