ஹூக்லி: மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் சாலையோரம் விற்பனை செய்யப்பட்ட பானி பூரியை வாங்கி சாப்பிட்ட மக்களில் நூற்றுக்கும் மேலானவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாகனங்கள் பரபரக்கும் இந்திய நகரங்களின் சாலை ஓரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற துரித உணவான பானிபூரி விற்பனை செய்வது வழக்கம். நம் ஊர் பக்கங்களில் மாலை நேரத்தில் இது விற்பனை செய்யப்படுவது வழக்கம். வட மாநிலங்களில் சிறிய அளவிலான பூரியில் பச்சை நிறத்தில் புதினா மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கரைத்தது போல இருக்கும் நீரை நிரப்பி சுமார் 30 ரூபாய்க்கு 10 பூரிகள் என விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சுகந்தா ஊராட்சியின் தோகாசியா (Dogachia) பகுதியில் அமைந்துள்ள பானிபூரி கடையில் நேற்று அதனை வாங்கி சாப்பிட்டவர்களில் நூறு பேரின் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அறிந்து சுகாதாரத் துறையின் சிறப்பு மருத்துவக் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் கொடுத்துள்ளனர். அதோடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவும் மருத்துவக் குழுவினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.