மொழிகளிலுமா பாலின வேறுபாடு? என்று தணியும் இந்த பேதம்!

2009 என்று நினைக்கிறேன். வலைப்பூக்களின் அறிமுகம், தமிழ்ச்சமூகத்தில் புதிய அலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.

முகந்தெரியாதவர்கள் எழுத்துகளால் மட்டுமே அறியப்பட்டு அடையாளம் காணப்பட்டு, கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த இணையம் வழியாக, இலக்கியமும் நட்பும் ஒரு பக்கம் வளர்ந்தாலும், எந்த நவீனத் தொழில்நுட்பத்தாலும் களைய முடியாத வேற்றுமைகள் நம் மனதில் வேரூன்றி இருப்பதைக் கண்டுணரும் வாய்ப்பும் அமைந்தது.

தீபலட்சுமி

இணையத்தில் அரசியல், சினிமா, என்று அனைத்து அறிவுசார் விவாதங்களிலும் விமர்சனங்களிலும் பங்குபெற்ற பெண்கள் “பதிவர் சந்திப்பு” என்று, மெய்யுலகில் நடைபெற்ற நிகழ்வுகளில் இடம் பெறவில்லை. வீட்டைவிட்டு, நினைத்த நேரம் வெளியேறும் வசதியும் வாய்ப்பும் அதிகம் உள்ள “ஆண் பதிவர்கள்” மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வுகளாகிப் போன இச்சந்திப்புகள், சில ஆண்கள் குழுக்கள் அமைத்துக் கொண்டு நட்பு பாராட்டவும் அதன் வாயிலாகப் பெண்களைக் கேலியும் அவதூறும் செய்யவும் வழி கோலின.

“எங்களை ஏன் இது போன்ற நிகழ்வுகளுக்கு அழைக்கவில்லை?” என்று கேட்ட பெண்களிடம்,“பெண் பதிவர்கள்” தனியாகச் சந்தித்துக் கொள்ளுமாறு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்பட்டது. ஆனாலும் ஆண்கள் மட்டுமே சந்தித்துக் கொள்ளும் நிகழ்வுகள் “ஆண் பதிவர் சந்திப்புகள்” என்று அழைக்கப்படவே இல்லை.

“பதிவர் என்று பொதுவாகச் சொன்னால் போதாதா? ஏன் பெண் பதிவர் என்று குறிப்பிட வேண்டும்?” என்ற கேள்வியும் அதன் நியாயமும் அனைவருக்கும் புரியத் தொடங்கியது.

ஆனால் உலகெங்கிலும் பல மொழிகளில் பாலின வேற்றுமை உண்டு. அஃறிணைப் பொருள்களுக்குக் கூட ஆண் – பெண் வேற்றுமை புழங்கும் மொழிகளில், ஹிந்தியும் ஃப்ரெஞ்சும் அடங்கும். ஆங்கிலத்தில்கூட நாடுகள், கப்பல்களைப் பெண்பாலில் குறிப்பிடும் வழக்கம் உண்டு. நாய் பூனைகளையும் அஃறிணை விகுதி இல்லாமல் ஆண் பெண் விகுதி கொண்டே அழைப்பவர்கள் ஆங்கிலம் பேசுபவர்கள். இந்திய மொழிகளில் வங்காளம், பிகாரி, சில வடகிழக்கு மொழிகள் தவிர ஏனைய மொழிகள் பலவும் வேறுபாடு உள்ளவையே. திராவிட மொழிகளில் அஃறிணைகளுக்கு மட்டுமே பாலின வேற்றுமை இருப்பதில்லை.

பாலினத்தின் இருமை என்பது ஒரு கற்பிதம் என்பதும் பாலினத் தேர்வுகள் வானவில்லின் நிறப்பிரிகைகளைக் காட்டிலும் எண்ணற்றவை என்பதால் பாலினச் சமத்துவத்தைப் பெண்கள் மட்டுமன்றி பால்புதுமையினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதன் ஆரோக்கியமான எதிரொலி தான் பால்பொதுச் சொற்கள் அல்லது பாலின வேற்றுமையற்ற சொற்கள்.

“ஒரு பைலட்டுக்கு மூன்று பிள்ளைகள். ஆனால் அந்த மூவருக்கும் அவர் அப்பா இல்லை. எப்படி?”

“தெரியவில்லையே!”

“ஏனென்றால் அந்தப் பைலட் அவர்களின் அம்மா”

இது போன்ற புதிர்களைச் சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருப்போம். இப்போது அவை காலாவதியாகி வருகின்றன.

டாக்டர், பைலட், புரொஃபஸர் என்று குறிப்பிட்ட மாத்திரத்தில் நடுத்தர வயதான ஆண் என்றும், நர்ஸ் என்றாலே குட்டையான பாவாடை அணிந்த பெண் என்றும் பதிந்து போன பிம்பங்கள் சிதைந்து வருவதால், lady doctor, male nurse போன்ற சொற்களும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன.

Woman (Representational Image)

பழம்பெருமை வாய்ந்த ரென் அண்ட் மார்ட்டின் (Wren & Martin) ஆங்கில இலக்கண நூலில் தொழில்ரீதியாக ஆண்களையும் பெண்களையும் வேறுபடுத்திக் குறிக்கப் பெரிய பட்டியலே உள்ளது. Actor, actress, poet, poetess, இப்படி.

ஆனால் இன்று ஆங்கிலத்தில் He/she என்று எழுதும் வழக்கம்கூட மெள்ள ஒழிந்து they என்னும் பன்மைப் பெயர்ச்சொல் ஒருமைப் பொதுச்சொல்லாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

Mankind – humankind, chairman -chairperson, members- people, postman – postperson, Folks/friends – Ladies & Gentleman போன்ற மாற்றுச் சொற்கள் வழங்கத் தொடங்கி விட்டன.

தமிழைப் பொறுத்தவரை பொதுவான மரியாதைக்குரிய `ர்’ விகுதி பெரும்பாலும் ஆண்களுக்கே பயன்பட்டு வந்திருக்கிறது. “அம்மா வந்தாள், அப்பா வந்தார்” என்று எழுதுவதில் உள்ள சிக்கலை நாம் கண்டுகொள்ளவே இல்லை.

நடிகர், இயக்குநர், தொழிலாளர், ஓட்டுநர், நடத்துநர், கடைக்காரர், ஆசிரியர், மருத்துவர், பாடகர், பொறியாளர், இசைக்கலைஞர், எழுத்தாளர், கவிஞர் ஆகிய சொற்கள் எந்தப் பாலினத்தையும் குறிக்கும் வகையில் பொதுவாகவே தமிழில் அமைந்திருக்கும்போது, நடிகை, பாடகி, கவிதாயினி, பெண் எழுத்தாளர், பெண் மருத்துவர் போன்ற வழக்குகள் தேவையில்லை என்பதே பாலினச் சமத்துவ ஆர்வலர்களின் கருத்து. இவற்றின் ஆங்கில இணைச் சொற்கள் ஏற்கெனவே காலாவதியாகி விட்டன. Actress, poetess, directress என்று ஆங்கில ஊடகங்கள் எழுதுவதை நிறுத்திப் பல காலமாகின்றன.

நம் பணியிடங்களில் பாலின வேற்றுமை அற்ற மொழியின் பயன்பாடு குறித்து இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லை.

ஆண்களைக் குறிப்பிடும் `திரு’ என்கிற குறியீட்டில் அவர்களது திருமண உறவின் நிலைப்பாடு புலப்படுவதில்லை. ஆனால் பெண்களுக்கு நிலவிவரும் செல்வி (Miss), திருமதி (Mrs) ஆகிய குறியீடுகளில் அவர்களது திருமண நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் கட்டாயம் உள்ளது. மேலைநாடுகளில் இந்தச் சிக்கலைக் களையும்விதமாக, திருமணமானவர்களும், ஆகாதவர்களும் பொதுவாக Ms என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனால் இதற்கு இணையான தமிழ்ச்சொல் பரவலாக இல்லை.

gender gap

ஆவணப் பட இயக்குநர் கீதா இளங்கோவன், அரசுப்பணியில் இருந்தபோது Ms என்று அதைத் தமிழில் மொழிபெயர்க்கத் திருமிகு என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.

“ஆணாகத் தங்களை அடையாளப்படுத்துபவர்களுக்குத் `திரு’ என்ற சொல்லையும் பெண்ணாகத் தங்களை அடையாளப் படுத்துபவர்களுக்கு (பெண்கள், திருநங்கைகள்) திருமிகு என்ற சொல்லையும் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் தங்கள் சொந்த வாழ்க்கை குறித்த தேவையற்ற கேள்விகளைப் பெண்கள் தவிர்க்க முடியும், இது பாலினச் சமத்துவத்துக்குப் பெரிதும் உதவும்.

மேலும், பெறுநர் ஆணா பெண்ணா என்று அறியாத போதும் சார் என்றே முகமன் கூறி எழுதப்படும் வழக்கத்தை மாற்ற“மேடம்/சார்” என்று எழுதும் வழக்கத்தைத் தொடங்கி வைத்ததாகவும் குறிப்பிட்டார்.

பாலின சமத்துவம் என்பது பெண்கள் போராடி அடையும் உரிமை மட்டுமல்ல, அது பகுத்தறிவு; காலத்தின் கட்டாயம். ஆனாலும், பேச்சு மற்றும் எழுத்து மொழியில் நுண்ணுணர்வுடன் பல மாற்றங்களைத் தொடர்ந்து கொண்டு வருவதன் மூலம் தான் வேறுபாடுகளை மொழியிலிருந்து மட்டுமல்ல நம் மனங்களிலிருந்தும் களைய முடியும்.

– தீபலட்சுமி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.