பெர்லின்.
லாட்வியா நாட்டின் நாடாளுமன்றம் ரஷியாவை பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக ஆதரவளிக்கும் நாடாக பகிரங்கமாக அறிவித்துள்ளது.
உக்கரைனில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷியா கொடூர தாக்குதல் நடத்துவதாகவும், உலக பிற நாடுகளும் ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்க வேண்டும் என லாட்வியா அழைத்துள்ளது.
ரஷியா உக்ரைன் மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியும், அவர்களை தாக்கி அவர்கள் சிரமப்படுவதை கருவியாக பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் உக்ரைனை நிலைகுலையச் செய்ய ரஷியா முயற்சித்து வருகிறது. மேலும் ஒட்டுமொத்த உக்ரைனையும் நிலைகுலையச் செய்ய முயற்சிக்கிறது என்று லாட்வியா பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் கடந்த மார்ச் மாதம் மரியபோல் நகரில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டரில் ரஷியா தாக்குதல் நடத்தியது. கிரெமெண்சக் நகரில் கடந்த ஜூன் மாதத்தில் வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தியது மற்றும் கடந்த மாதம் ஒடெசா நகரத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தியது என லாட்வியா நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கோள்காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்துள்ளதாக ரஷியா கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ரஷியாவின் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை, பொது மக்களுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு இணையானது. இதனால் ரஷியாவை பயங்கரவாத நாடாக அறிவிக்கிறோம்.
எங்களைப் போன்ற ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் இதனை அங்கீகரிக்க அழைப்பு விடுக்கிறோம். ரஷியாவுக்கு எதிரான இந்த தீர்மானத்தில் மொத்தம் 100 பேர் கொண்ட லாட்வியா நாடாளுமன்ற அவையில் 67 பேர் ஆதரவாக வாக்களித்தனர், 16 பேர் வாக்களிக்கவில்லை, மீதி உள்ளவர்கள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
லாட்வியா ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.