ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக வெளியான தகவலில், தீவிரவாதி ஒருவர் பர்கலில் உள்ள ராணுவ முகாமின் வேலியைக் கடக்க முயன்றபோது, ராணுவ வீரர்கள் கவனித்து துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். இது இருதரப்புக்கும் மத்தியிலான துப்பாக்கிச் சண்டையாக மாறியிருக்கிறது.
இந்த சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இரண்டு வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள். மேலும், இந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பின்னணியில் இருப்பதாக காவல்துறை தெரிவித்தனர்.
2018-க்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவாகும். ரஜோரி மாவட்டம் மற்றும் ஜம்மு பிராந்தியத்தின் பிற பகுதிகள் பெரும்பாலும் பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டுள்ளன. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக ஜம்முவில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் தொடர்கிறது.
சமீபத்தில், பா.ஜ.க பொறுப்பாளர் எனக் கூறப்பட்ட தலிப் ஹுசைன் ஷா கைது செய்யப்பட்டதற்குப் பின்பு லஷ்கர் இ தொய்பாவின் பெரிய குழு அங்கிருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு முதல்நாள், யூனியன் பிரதேசத்தின் புல்வாமா மாவட்டத்தில் 25 கிலோ வெடிமருந்து சாதனத்தை (ஐஇடி) கண்டுபிடித்திருக்கிறது. இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.