நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காக 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதன் காரணமாக அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஹரியானா மாநிலம், கர்னல் மாவட்டத்தின் ஹெம்தா கிராமத்திலுள்ள ரேஷன் கடைகளில், “20 ரூபாய் கொடுத்து தேசியக்கொடி வாங்கினால் மட்டுமே ரேஷனில் பொருள்கள் வழங்கப்படும்” என ஊழியர்கள் மக்களைக் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. மேலும், தேசியக்கொடி வாங்க மறுத்தவர்களுக்கு ரேஷன் பொருள்கள் இல்லையெனக்கூறி ஊழியர்கள் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அதையடுத்து, “மக்களைக் கட்டாயப்படுத்தி தேசியக்கொடி வாங்கச் சொல்வதா?” என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனக் குரல்களை உயர்தின. இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசியத்தை ஒருபோதும் விற்க முடியாது. ரேஷன் பொருள்கள் கொடுக்கும்போது, ஏழை மக்களிடம் மூவர்ணக்கொடிக்காக 20 ரூபாய் வசூலிப்பது வெட்கக்கேடானது. மூவர்ணக்கொடியுடன், பா.ஜ.க அரசு நம் நாட்டு ஏழைகளின் சுயமரியாதையையும் தாக்குகிறது” எனப் பதிவிட்டிருந்தார்.
இதேபோல், பா.ஜ.க எம்.பி வருண் காந்தியும் இந்தச் செயலுக்கு தன்னுடைய கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தார்.
தேசியக்கொடி விவகாரம் தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து காங்கிரஸ் எம்.ஏ.ஏ விஜயதாரணியிடம் பேசினோம். “அரசாங்கம் அனுமதி அளித்திருந்தால் மட்டுமே ஊழியர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க முடியும். ஆனால், அரசு தேசியக்கொடியை விற்பனைசெய்ய எந்த அறிவிப்பும் செய்ததாகத் தெரியவில்லை. எனவே, இந்தச் செயலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை நடத்தவேண்டும். அப்போதுதான் என்ன நடந்தது என்பது முழுவதுமாக வெளியே தெரியும். விஷக்கிருமிகள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசியக்கொடிமீதான விழிப்புணர்வை மத்திய அரசு மக்களிடம் அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் நாராயண் திருப்பதி பேசுகையில், “75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ.க மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரம் செய்துகொண்டிருக்கிறது. அதனடிப்படையில் மக்களுக்கு எளிதில் தேசியக்கொடியை கொண்டு போய் சேர்ப்பதற்காக பல இடங்களில் கொடிகளை விற்பனை செய்கிறார்கள். தேசியக்கொடியை கட்டாயம் வாங்கித்தான் ஆக வேண்டும். அப்போதுதான் ரேஷனில் பொருள்கள் வழங்கப்படும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. இது தவறு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கொடியைக் கட்டாயப்படுத்தி விற்பனைசெய்த நபர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது” என்றார்.