Driver and cleaner killed in Lorry accident at Trichy – Madurai Highway: தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்து இரு மடங்காக அதிகரித்து இருக்கும் நிலையில் பல்வேறு சாலைகளில் அதிவிரைவாக வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்கிச்செல்வது பெரும் விபத்துகளுக்கு வழி வகுக்கின்றது.
சென்னை-திருச்சி-மதுரை-நெல்லை-கன்னியாகுமரி வழித்தடங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதையும் படியுங்கள்: தேசிய கொடியை வாங்க கட்டாயப்படுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் : மதுரையில் தொடங்கிய விசாரணை
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு போட்டி போட்டுக்கொண்டு ஓட்டிய 2 லாரி ஓட்டுநர்களின் அஜாக்கிரதையால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு ஒரு லாரியின் ஓட்டுநர்-உதவியாளர் இருவருமே லாரியின் உள்ளேயே கரிக்கட்டைகளாகிவிட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த விபரம் வருமாறு;
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 பேர் எரிந்து கரிக்கட்டைகளாகினர்.
நாகர்கோயில் அருகே உள்ள வள்ளியூருக்கு, அரியலூரிலிருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டுள்ளது. அந்த லாரி, மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், திருச்சி பெல் தொழிற்சாலையிலிருந்து தூத்துக்குடிக்கு காற்றாலை பொருட்கள் ஏற்றிக் கொண்டுபோய் இறக்கிவிட்டு எதிரே வந்துகொண்டிருந்த இரு லாரிகள் ஒன்றோடு ஒன்று போட்டிப்போட்டு வந்து கொண்டிருந்தன.
இரு லாரிகளும் அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் ஒன்றோடு ஒன்று உரசியது. அதனால் நிலை குலைந்த ஒரு லாரி மாற்று சாலைக்கு சென்றது. அப்போது அங்கு வந்து கொண்டிருந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் இரு லாரிகளும் தீப்பற்றி மளமளவென எரிந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறை தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் காற்றாலை லாரியில் வந்த டாரஸ் லாரி ஓட்டுநர் இந்திரா மணிபால், லாரியின் உதவியாளர் பட்டேல் ஆகிய இருவரும் லாரியில் மாட்டிகொண்டு தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. டி.எஸ்.பி ராமநாதன் தலைமையிலான போலீஸார் கருகிய உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தினால் நள்ளிரவில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil