16 நாட்களுக்கு பிறகு கீழச்சேரி பள்ளி திறப்பு.. ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கினர்..!

திருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 16 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செயல்பட தொடங்கியது.

திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவி சரளா (17) கடந்த மாதம் 25ம் தேதி காலை விடுதி அறையின் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த மாதம் 28-ம் தேதி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் பள்ளி விடுதியில் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். மாணவி மரணத்தை அடுத்து கடந்த மாதம் 25-ம் தேதி முதல் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், மாணவிகளின் நலன் கருதி, பள்ளிக் கல்வித்துறை, கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நேற்று அந்தப் பள்ளி மீண்டும் செயல்படத் தொடங்கியது.

முதல் நாளான நேற்று பள்ளியின் மொத்த மாணவிகள் 859 பேரில், 617 மாணவிகள் (சுமார் 70 சதவீதம்) பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வராத மாணவிகளில் 63 பேர் விடுதி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதியின் மொத்த மாணவிகள் 63 பேரில், தெக்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாணவிகள் 23 பேர் நேற்று வேறு பள்ளிகளில் சேருவதற்காக மாற்றுச் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

மேலும், நேற்று மீண்டும் பள்ளி செயல்பட தொடங்கினாலும், மாணவிகளுக்கு பாடங்களுக்கு பதில், அவர்களிடம் உள்ள அச்சம், பதற்றம் ஆகியவற்றை போக்கும் வகையில் மனநல ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர். இன்றும் இந்த ஆலோசனை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை முடிவுக்கு வராததால், மூடப்பட்டுள்ள பள்ளி விடுதியை மீண்டும் திறக்க சமூக நலத்துறை இன்னும் அனுமதி அளிக்கவில்லை. ஆகவே, விடுதி திறக்கப்படவில்லை.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.