6 வயது மகளை அடித்துக் கொன்ற தாய் கைது
தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு
அருகே, ஆறு வயது மகளை அடித்துக் கொலை செய்த தாயை, போலீசார் கைது
செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த அரடாப்பட்டையைச்
சேர்ந்தவர் பூபாலன், 37; இவரது மனைவி சுகன்யா, 28; இவர்களது மகள் ரித்திகா,
6. இவர், பார்க்க தந்தை பூபாலனை போலவே இருப்பார்.பூபாலனுக்கும்,
சுகன்யாவிற்கும், அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
எப்போதெல்லாம் தம்பதிக்குள் தகராறு நடக்கிறதோ, அப்போதெல்லாம் தன் கணவனை
அடிப்பது போல் நினைத்து, மகள் ரித்திகாவை, சுகன்யா அடித்துக்
கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் தம்பதிக்குள் தகராறு
ஏற்பட்டபோது, ரித்திகாவை, சுகன்யா தாக்கினார். இதில், மயக்கமடைந்த
ரித்திகாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, திருவண்ணாமலை அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக
இறந்தார். வெறையூர் போலீசில் பூபாலன் அளித்த புகாரில் வழக்குப்பதிந்த
போலீசார், கொடூர தாய் சுகன்யாவை கைது செய்தனர்.
2 பேருக்கு கத்தி வெட்டு ஆட்டோ டிரைவர் கைது
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை, சித்தபட்டினத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சூர்யா, 24; அப்பகுதி ஆட்டோ ஸ்டாண்டில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். ஜம்படை காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன்கள் ராதாகிருஷ்ணன், 28; ரங்கநாதன், 23; இவர்களும் அதே ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.
பயணிகளை ஏற்றுவதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், சூர்யா, மது வாங்கிக் கொண்டு, அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன் திறந்த வெளியில் குடிக்கச் சென்றார். அங்கு ஏற்கனவே மது குடித்துக் கொண்டிருந்த ரங்கநாதன், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும், சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா ஆட்டோவில் வைத்திருந்த கத்தியால் இருவரையும் வெட்டினார். புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சூர்யாவை கைது செய்தனர்.
தி.மு.க., பிரமுகர் வெட்டி கொலை
வானுார் : ஆரோவில் அருகே, தி.மு.க., பிரமுகர், மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த கோட்டக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்.இவரது மனைவி சரஸ்வதி, முன்னாள் ஊராட்சி தலைவர். இவர்களது மகன் சுகுவாணன், 24. இவர், நேற்று காலை, 6;00 மணிக்கு, பைக்கில் தனியாக திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே பைக்கில் வந்த கும்பல் அவரை வழிமறித்தது. பைக்கை போட்டு விட்டு, ஜெயகுமார் தப்பியோடினார். கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்று உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி தப்பியது.தகவலறிந்த அவரது உறவினர்கள் விரைந்து, ஜெயக்குமாரை மீட்டு, ‘ஜிப்மர்’ மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இரண்டாண்டுகளுக்கு முன், ஆலங்குப்பம் அடுத்த ராயப்பேட்டையைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், கோட் டக்கரையைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் இரு சக்கர வாகன விபத்து காரணமாக பிரச்னை ஏற்பட்டது.இந்த தகராறு தொடர்பாக, ராயப்பேட்டை தரப்பினர், இடையஞ்சாவடி கிராமத்தைச்சேர்ந்த சிலரை அழைத்து வந்து, கோட்டக்கரை கிராமத்தில் பஞ்சாயத்து செய்த போது, இடையஞ்சாவடி வாலிபரை கோட்டக்கரை நபர்கள் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, இடையஞ்சாவடியைச் சேர்ந்த மணிகண்டன் தலைமையில் ஒரு கும்பல், கோட்டக்கரையைச் சேர்ந்த சங்கர் என்பவரை, வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டன், கோட்டக்கரை தமிழ்வாணன் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். இதில், தமிழ்வாணன், ஜெயக்குமாரின் தம்பி மகன் ஆவார். அவரை ஜாமினில் எடுக்க ஜெயக்குமார் உதவியுள்ளார்.இது, கொலை செய்யப்பட்ட சங்கரின் உறவினர் ஒருவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக ஜெயக்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என, போலீசார் கூறினர்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இந்த கொலை தொடர்பாக, ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதில், சரஸ்வதி, 40; மனோஜ், 22; சாந்தி, 37; ஆகிய மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பிச்சைக்காரரை கொன்ற கொடூர வாலிபர் கைது
கோவை : நடைபாதையில் பிச்சைக்காரர் தலையில் கல்லை போட்டு, கொடூரமாக கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.கோவை ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் ரோடு மேட்டுப்பாளையம் ரோடு சந்திப்பில், வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள கடை முன்பாக, 45 வயது மதிக்கத்தக்க நபர், நான்கு நாட்களுக்கு முன் ரத்த வெள்ளத்தில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.அவரது தலையில் கல்லை போட்டு, கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஆர்.எஸ்.புரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட நபர், அந்த பகுதியில் பிச்சை எடுத்தவர் என்றும், பெயர் பண்ணாரி என்பதும் கண்டறியப்பட்டது.இவர், சில வாரங்களுக்கு முன், ரோட்டில் பிச்சை எடுத்தபோது ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் மீட்கப்பட்டு, அட்டுக்கல் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அரசியல் கட்சியினர் நடத்திய போராட்டம் காரணமாக, அங்கிருந்து விடுவிக்கப்பட்ட பண்ணாரி, மீண்டும் ஆர்.எஸ்.புரத்தில் நடைபாதையில் தங்கி, பிச்சை எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், இரவு நேரத்தில் மது குடிப்பதில், பண்ணாரிக்கும், காமராஜபுரத்தை சேர்ந்த சரவணகுமார், 24, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த சரவணகுமார், பண்ணாரியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணுக்கு நார்வே விசா ரூ.6 லட்சம் பறித்தவர் கைது
கோவை : ‘ஐரோப்பிய நாடான நார்வே நாட்டில், வேலைக்கான விசாவுக்கு 6 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும்’ என்று கூறி, மோசடியில் ஈடுபட்ட நபரை, கோவை போலீசார் கைது செய்தனர்.கோவை சித்தாபுதுார் வி.கே.கே., மேனன் ரோட்டில் ‘என்.ஜே.பிளேஸ்மென்ட் அண்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ என்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முருகன் என்பவர், நிர்வாக இயக்குனராக இருந்து வந்தார்.
இந்நிறுவனம் சார்பில், ‘நார்வே நாட்டில் வேலைக்கு ஆள் எடுப்பதாக’ பேஸ்புக்கில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதைக்கண்ட சூலுார் முத்துக்கவுண்டன்புதுார் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டதாரி தாரணி, 27, அது பற்றி போனில் விசாரித்தார்.போனில் பேசிய முருகன், ‘நார்வே நாட்டில் எளிதில் வேலை வாங்கி விடலாம். 6 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் செலுத்தினால் போதும்’ என்று தெரிவித்துள்ளார்.அதை நம்பிய தாரணி, தன் கணவருடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நேரில் சென்றார்.
முருகனை சந்தித்துப் பேசினார். ‘நிச்சயம் நார்வே வேலை வாங்கி விடலாம்’ என்று முருகன் கூறியதன்பேரில், கூகுள் பே மற்றும் வங்கி கணக்கு பரிமாற்றம் மூலமாக, மொத்தம் 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.2020ம் ஆண்டு செப்., முதல் 2021 டிசம்பர் வரை, இவ்வாறு பணம் கொடுத்துள்ளனர். அதை வாங்கிக்கொண்ட முருகன், தாரணிக்கு நார்வே நாட்டு விசா கொடுத்து விட்டார். ‘விமான டிக்கெட் வருவதற்கு மட்டும், சற்று தாமதம் ஆகும்’ என்று தெரிவித்துள்ளார்.
சில மாதங்கள் ஆன நிலையில், சந்தேகம் கொண்ட தாரணி, தனக்கு வழங்கப்பட்ட விசா பற்றி விசாரித்தார்.அதில், முருகன் கொடுத்த விசா மோசடியானது என்று தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாரணி, காட்டூர் போலீசில் புகார் தெரிவித்தார். விசாரித்த போலீசார், மோசடி பேர்வழி முருகனை கைது செய்தனர்.
இருவரின் காதல் டார்ச்சர் இளம்பெண் தற்கொலை
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இருவரின் காதல் டார்ச்சரால் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தார். ஒருவரை போலீசார் கைது செய்தனர்.மார்த்தாண்டம் அருகே மருதன்கோடு இலங்கன்விளையை சேர்ந்தவர் திவ்யா 20. கல்லுாரி படிப்பு முடித்து மேல் படிப்புக்கு தயாராகி வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் 20. இருவரும் காதலித்து வந்த நிலையில் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளனர்.திவ்யா இனையத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து படித்த போது அதே பகுதியை சேர்ந்த ெஷர்லின் புரூஸ் 19, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலாகியுள்ளது. இதை அறிந்த ரஞ்சித், தன்னுடன் திவ்யா இருக்கும் போட்டோக்களை வெளியிட்டார்.
திவ்யா தன் தாய் வீட்டுக்கு சென்றால் பழைய காதலனை பார்க்க போகிறாயா என கேட்டு ஷெர்லின்புரூஸ் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த திவ்யா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மார்த்தாண்டம் போலீசார் ஷெர்லின்புரூசை கைது செய்தனர். ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்