புதுடெல்லி: நாட்டின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார். யு.யு.லலித் வரும் 27-ம் தேதி பதவியேற்பார். 74 நாட்கள் மட்டுமே இவர் இந்தப் பதவியில் இருப்பார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இம்மாதம் 26-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 3-ம் தேதி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து மரபுப்படி உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான யு.யு.லலித்தின் பெயரை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு என்.வி.ரமணா மறுநாளே பரிந்துரை செய்தார். சட்ட அமைச்சகம் இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல், நாட்டின் தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளதாக சட்ட அமைச்ச கம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்த யு.யு.லலித் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நேரடியாக நியமிக்கப்பட்டவர்களில் எஸ்.எம்.சிக்ரிக்கு பிறகு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்கிறார். என்றாலும் மூன்று மாதங்களுக்கும் குறைவாகவே (74 நாட்கள்) இவர் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். வரும் நவம்பர் 8-ம் தேதி, தனது 65-வது வயதில் இவர் பணி ஓய்வு பெறுவார். இவருக்குப் பிறகு டி.ஒய்.சந்திரசூட் அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்பார்.
யு.யு.லலித்தின் தந்தை யு.ஆர்.லலித்தும் வழக்கறிஞர் ஆவார். இவர் பிறகு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் யு.யு.லலித் 1957 நவம்பர் 9-ம் தேதி பிறந்தார். 1983-ல் வழக்கறிஞராக பணியாற்றித் தொடங்கினார். 1985 வரை பாம்பே உயர் நீதிமன்றத்தில் வழக்காடி வந்த இவர் 1986 ஜனவரியில் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். 2004-ல் மூத்த வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார்.