75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 அஞ்சல் அட்டைகளில் சுதந்திர போராட்ட தலைவர்கள் குறிப்பு மற்றும் தேசிய சின்னங்கள் வரைந்து பள்ளி மாணவர்கள் அசத்தினர்.
திருச்சி, தென்னூரில் உள்ள தென்னூர் நடுநிலைப்பள்ளியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாணவ, மாணவிகள் 75 அஞ்சல் அட்டைகளில், 750 வினாடிகளில் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் குறிப்பு மற்றும் தேசிய சின்னங்களை வரைந்து திருச்சி மாவட்ட நூலகத்திற்கு அஞ்சல் அனுப்பினர். மறந்துபோன அஞ்சல் கடிதம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பள்ளிக்கு பிரத்யேகமாக அஞ்சல் துறை சார்பில் கொண்டுவரப்பட்ட அஞ்சல் பெட்டியில் மாணாக்கர்கள் தாங்கள் எழுதிய அஞ்சல் அட்டைகளை ஆர்வத்துடன் போட்டனர். மேலும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில், பள்ளி மாணாக்கர்களுக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டதுடன் உறுதி மொழி எடுக்கப்பட்டது. முன்னதாக பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்கும் வகையில் நூலக அட்டை வழங்கப்பட்டது.
புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் அமிர்தம் அறக்கட்டளை சார்பில் தென்னூர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார் பங்கேற்று மாணாக்கர்களுக்கு புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும், சுதந்திர தினம் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
– பிருந்தா, செய்தியாளர்
இதையும் படிக்க: சோழர்களின் அரண்மனைகள் குறித்த ஜெ.மோ.வின் சர்ச்சை கருத்து- பதிலளித்த நெட்டிசன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM