சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவடைந்த கையோடு, திமுக இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
திமுக இளைஞரணியை வலுப்படுத்தும் நோக்கிலும், திராவிட மாடல் அரசு குறித்து இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையிலும் இந்த பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இளைஞரணி உறுப்பினர் அட்டைகளை வழங்கிய சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான
, தொடர்ந்து கூட்டத்தில் பேசியபோது, “இளைஞரணியை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாகப் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை சுமார் 100 சட்டமன்ற தொகுதியில் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 234 தொகுதிளிலும் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கூட்டத்துக்கு எவ்வளவு பேர் ஆர்வமுடன் வந்தாலும் மகிழ்ச்சிதான். ஆனால் அதேசயம் 100 பேர் கூடினாலும், நிர்வாகிகள் சோர்ந்துவிடாமல் அவர்களுக்காக உற்சாகத்துடன் இக்கூட்டங்களை நடத்த வேண்டும்.
கட்சியில் தற்போது இருக்கும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பலர் ஒரு காலத்தில் இளைஞரணியில் இருந்தவர்கள்தான். அவ்வளவு ஏன்? நம்ம முதல்வரும்கூட இளைஞரணியில் இருந்து வந்தவர்தான். கட்சிக்காக தீவிரமாக உழைப்பவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரம் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும்” என்று இக்கூட்டத்தில் உதயநிதி பேசியுள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எம்எல்ஏவாக மட்டும் இருந்துவரும் உதயநிதி ஸ்டாலினை விரைவில் அமைச்சராக்கி ஸ்டாலின் அழகுப் பார்ப்பார் எனவும், திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் வேளையில் உதயநிதி அமைச்சராக முடிசூட்டப்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரவாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆக உள்ள நிலையில் இன்னமும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்படவில்லை. இதற்கு இன்னமும் அவர் சினிமாவில் நடித்துவருவது, திரைப்படங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்திவருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. இதனிடையே அவர் விரைவில் துணை முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் அறிவாலய வட்டாரத்தில் ஒரு தகவல் சமீபகாலமாக உலவி வருகிறது.
இந்த நிலையில்தான், நம்ம முதல்வரே இளைஞரணியில் இருந்து வந்தவர்தான் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. முக்கியமாக நம்ம முதல்வரே இளைஞரணியில் இருந்து வந்தவர்தான் என்று அவர் கூறியுள்ளதன் மூலம், எதிர்காலத்தில் தான் அமைச்சர் எல்லாம் ஆகமாட்டேன்;ஸ்ட்ரைட்டா சி.எம்., தான் என்று மறைமுகமாக சொல்ல வருகிறாரா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
இதுபோன்ற கேள்விகள், சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் முதலில் உதயநிதி அமைச்சராக வேண்டும் எனவும், அமைச்சராக இல்லாமல் எம்எல்ஏ என்ற நிலையிலேயே கட்சியில் அவருக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் தேவையற்ற விமர்சனங்களுக்கு இடம் அளிப்பதாக இருக்கிறது என்கின்றனர் விவரமறிந்த உடன்பிறப்புகள் சிலர்.