டேராடூன்: விமானத்தில் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட பாடி பில்டர், அந்த புகைப்படம் போலி விமான புகைப்படம் என்று தெரிவித்துள்ளார். அரியானாவைச் சேர்ந்த பாடிபில்டர் பாபி கட்டாரியா, சமூக வலைதளங்களில் தனது வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். இந்நிலையில் அவர் விமானத்திற்குள் புகைபிடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், அவர் 15 நாட்கள் தங்களது விமானத்தில் பறக்க அனுமதிக்கமாட்டார் என்றும் அறிவித்தது. டேராடூன் போலீசார் பாபி கட்டாரியா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 342, 336, 290, 510, 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வாறாக அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் பாபி கட்டாரியா வெளியிட்ட கூலான பதிவில், ‘எல்லோரிடமும் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். எப்படி லைட்டரை விமானத்தில் கொண்டு செல்ல முடியும்? அதனை ஸ்கேனர் கண்டறிந்துவிடும் அல்லவா? சிகரெட்டை கூட எடுத்துச் செல்ல முடியும்; ஆனால் லைட்டரை எடுத்துச் செல்ல முடியாது. இதுகூட எனக்கு தெரியாதா? தற்போது வெளியான புகைப்படம் கடந்த 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஷூட்டிங்கில், போலி விமானத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள். எனவே நான் வெளியிட்ட புகைப்படத்தால் எந்தவொரு பயணியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை’ என்று கூறியுள்ளார். மற்றொரு வீடியோவில் தெருவில் மது அருந்தும் பாபி கட்டாரியாவின் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானதால், அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது. அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாபி கட்டாரியா கூறியுள்ளார்.