சென்னை: மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்க மத்திய அரசுடன் பகை உணர்வான அணுகுமுறை வேண்டாம் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், வேண்டாத செய்திகளை பரப்பும் அதிகாரிகளை களையெடுக்கவும் முடிவெடுத்துள்ளார்.
நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமாக நடக்கவில்லை, ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு வருத்தங்கள் இருந்தாலும், மத்திய அரசுடன் சுமுகமான போக்கையே தமிழக அரசு விரும்புகிறது. இதைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களையும், அதன்மூலம் போதிய நிதியையும் பெற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முயற்சிகள் செய்து வருகிறது.
அதேநேரத்தில், ஒரு அரசியல் கட்சியாக கொள்கைரீதியில் பாஜகவை கடுமையாக எதிர்ப்பதில் மாற்றம் இல்லை என்பதிலும் திமுக உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வருடன் மிகவும் சுமுகமாக பேசிவிட்டு சென்றுள்ளார். முதல்வர் நேரில்சென்று அழைக்காவிட்டாலும், அவர் மருத்துவமனையில் இருந்து விடுத்த கோரிக்கையை ஏற்று நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், மேடையில் சிரித்தபடி முதல்வருடன் அளவளாவியது திமுகவினரைக்கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன்மூலம் முதல்வர் மீது தனிப்பட்ட முறையில் கோபமோ வருத்தமோ இல்லை என்பதை பிரதமர் தெளிவுபடுத்திவிட்டுச் சென்றுள்ளதாகவே பேசப்படுகிறது.
எனவே, மாநிலத்தில் அண்ணாமலை போன்றவர்கள் ஆட்சிக்கும் திமுகவுக்கும் எதிராக கருத்து தெரிவிக்கும்போது, அவர்களுக்கு உரிய பதிலடியை கடுமையாக அளிக்கலாம். ஆனால், மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்தியில் ஆளும் பாஜகவுடன் தேவையில்லாத பிரச்சினைகள் செய்யக்கூடாது என்று முதல்வர் நினைப்பதாகக் கூறப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களில் பிரதமர் படம் இடம் பெறாததற்கு யார் காரணம் என்பது விவாதப்பொருளாக மாறியது. இதுபற்றி மத்திய அரசு அதிகாரிகள் முன்கூட்டியே சுட்டிக்காட்டியபோதும், தொடர்புடைய மாநில அரசு அதிகாரிகள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையாம். பிரதமர் படத்தை வைத்தே ஆக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான், விளம்பரத்தில் மோடி படம் இடம் பெற்றது.
அதன்பிறகுதான் இங்குள்ள அதிகாரிகள் சிலர் தனிப்பட்ட தங்கள் மோடி எதிர்ப்பு கொள்கையால் பிரதமர் படம் இடம்பெறாமல் தடுத்தது முதல்வருக்குத் தெரியவந்துள்ளது. தனிப்பட்ட முறையில் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள அந்த அதிகாரிகள், தொடர்ந்து மத்திய அரசை சீண்டும் வகையிலும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் விதத்திலும் செய்திகளையும், வதந்திகளையும் கிளப்பிவிட்டு வருகின்றனர் என்பதும் பலரால் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பாஜகவுக்கு எதிரான மனநிலை உள்ள அதிகாரிகளை கட்டம் கட்டும்பணி நடந்து வருகிறது. ‘அரசியலை நான் பார்த்துக் கொள்கிறேன். மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை மட்டும் அதிகாரிகள் பார்த்துக் கொண்டால் போதும்’ என்பதில் உறுதியாக உள்ள முதல்வர், அதை மீறி செயல்படும் அதிகாரிகளைக் கண்காணிக்கவும், களையெடுக்கவும் முடிவெடுத்துள்ளாராம்.
திமுக, கொள்கைரீதியாக தொடர்ந்து பாஜகவை எதிர்க்கும் கட்சியாகத்தான் இருக்கும். இதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவில் அரசியலை புகுத்தக் கூடாது. இதனால், தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஏராளமான திட்டங்கள் கிடைக்காமல்போக வாய்ப்புள்ளது. மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே இந்த அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் நினைப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர, குறிப்பிட்ட சில அதிகாரிகள், பாஜக எதிர்ப்பு நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுடன் இணைந்து வேண்டாத செய்திகளையும், வதந்திகளையும் கிளப்பி, மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை சீர்குலைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முதல்வர் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, இதுபோன்றவர்களை விலக்கிவைத்து நடவடிக்கை எடுத்தால், அரசுக்கு அவ்வப்போது ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும் என்பதே நடுநிலையான உயர் அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.
திமுக, கொள்கைரீதியாக தொடர்ந்து பாஜகவை எதிர்க்கும் கட்சியாகத்தான் இருக்கும். இதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவில் அரசியலை புகுத்தக் கூடாது. இதனால், தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஏராளமான திட்டங்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது என்பது முதல்வரின் எண்ணம்.