அருந்ததீ படத்தை பார்த்து நடிகை அனுஷ்காவின் அடிமையான மாணவர் ஒருவர் மறுபிறவி எடுப்பதற்காக தீக்குளித்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனுஷ்காவின் நடிப்பில் 2009 ல் வெளியான அருந்ததி படத்தை தொடர்ச்சியாக பார்த்து அனுஷ்கா போல மறுபிறவி எடுக்கலாம் என்று நினைத்து தீக்குளித்து உயிரை விட்ட மாணவர் ரேணுகா பிரசாத் இவர் தான்.!
கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்த ரேணுகா பிரசாத். பி.யு.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்ட இவர், அந்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னை பாவித்து நடந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில் சமீபகாலமாக அனுஷ்கா நடித்த அருந்ததி திரைப்படத்தை ரேணுகா பிரசாத் 100 முறைக்கும் மேல் தொடர்ச்சியாக பார்த்து வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் திரை உலகில் இருந்து அனுஷ்கா புதிய வாய்ப்புகள் இன்றி இருப்பது கூட தெரியாமல் அவரது வெறித்தனமான ரசிகராகி உள்ளார்
அந்த படத்தில் அனுஷ்கா தலையில் தேங்காய்களால் அடித்து கொல்லப்பட்ட பின்னர் முக்தி பெற்று அனுஷ்கா மறுபிறவி எடுத்து வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
இந்த நிலையில் தானும் அனுஷ்காவை போல உயிரிழந்து சக்தி மிக்கவராக மறுபிறவி எடுத்து விடலாம் என்று முட்டாள் தனமாக நம்பிய மாணவர் ரேணுகா பிரசாத் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து உள்ளார்.
இதில் உடல்கருகி அவர் உயிருக்கு போராடினார். அப்போது அவரது தந்தையிடம் முக்தி கொடுங்கள் அப்பா, எனக்கு முக்தி கொடுங்கள் என்று கேட்க , தந்தையோ நான் எப்படிடா முக்தி கொடுக்க முடியும் ? எத்தனை முறை சொன்னேன் அருந்ததி படம் பார்க்காதேன்னு , கேட்டியாடா என்று தலையில் அடித்து வேதனைப்பட்டார்
உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரேணுகா பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மதுகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமாவை நிஜம் என்று நம்பி, மாயையில் சிக்கி மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த மாணவர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.