சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் தேசியக் கொடி சின்னம் பதித்து விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
திருவள்ளூரில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தனியார் பால் விலை உயர்வை அரசு நெறிப்படுத்த வில்லை என பால் முகவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.
பொன்னுசாமி, சங்கத் தலைவரே கிடையாது. அவர் கேள்வி கேட்கவே தகுதி இல்லை. ‘நானும் ரவுடிதான்’ என வடிவேலு சொல்வது போல், தன்னை தலைவரென அவர் சொல்லி வருகிறார்.
தமிழ்நாட்டில் நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கிய பாஜகவுக்கும், அதன் தலைவர் அண்ணாமலைக்கும் பதில் சொல்ல முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக போதைப் பொருட்களை தடுக்க அதிமுக அரசு தவறிவிட்டது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு பல விதமான இனிப்புகள் ஆவினில் தயாரிக்கப்படும். மேலும், சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி சின்னத்தில் ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட் அச்சடிக்கப்பட்டு விரைவில் விநியோகிக்கப்படும்.
பால் விலை 3 ரூபாய் குறைத்ததால் 270 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பால் விலை குறைவால் ஒரு நாளைக்கு 85 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது” என தெரிவித்தார்.