இந்தியாவில் முற்போக்கு சிந்தனைகள் அதிகம் கொண்ட மாநிலமாக, சமூக நீதி, இட ஒதுக்கீட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இருப்பினும் சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. “எத்தனை பெரியார்கள் வந்தாலும் உங்களை திருத்த முடியாது” என்று கூறுவது போல தலித்களை குறிவைத்து நிகழ்த்தப்படும் தொடர் தாக்குதல்கள் மிகுந்த வேதனையை அளித்து வருகின்றன. சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தலித் தலைவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) ஆய்வு ஒன்று நடத்தியது.
24 மாவட்டங்களில் 400 தன்னார்வலர்கள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 17 வகைகளில் தலித் பஞ்சாயத்து தலைவர்களிடம் பாகுபாடு பார்க்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 386 தலித் தலைவர்களில் 22 பேருக்கு அலுவலகத்தில் அமர நாற்காலிகள் கூட தரப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. உயர் சாதியினர் மத்தியில் அறையின் ஓர் ஓரத்தில் தரையில் தான் அமர வைக்கப்படுகிறார்களாம். அலுவலக கோப்புகளை பார்ப்பதற்கு கூட தருவதில்லை.
பல்வேறு உள்ளாட்சி அலுவலகங்களில் தலித் தலைவர்களின் பெயர்கள் அடங்கிய பலகைகள் வைக்கப்படுவது இல்லை. கவுன்சில் கூட்டங்கள் நடத்த போதிய ஒத்துழைப்பு அளிக்கப்படுவது இல்லை. தலித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் மற்ற சமூகத்தினர் புறக்கணித்து விடுகிறார்கள். தீர்மானங்களை உறுப்பினர்களே நிறைவேற்றி விட்டு, கையெழுத்து வாங்குவதற்கு மட்டும் வருகிறார்கள்.
தேவையில்லாத தாக்குதல் சம்பவங்களும் நடக்கிறதாம். மேலும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின நாட்களில் தேசிய கொடி ஏற்றுவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் தலித் தலைவர்களுக்கு அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட வழங்கப்படாதது சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதுவும் பெண் தலித் தலைவர்கள் என்றால் பாகுபாடுகள் ஏராளமாக நடக்கிறதாம்.
75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் தீண்டாமை இன்னும் நீங்காதது பெரும் குறையாக பார்க்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் முற்போக்கான நிலையை எட்டி விட்டதாக தமிழகம் ஒருபுறம் பெருமை பேசிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் இதே தமிழகத்தில் தான் தீண்டாமை கொடுமைகளும் நடந்து கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்ற மனப்பான்மையும், ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சியும் அவசியம் என்பதை மாநில அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி செயல்படுத்த வேண்டும். அதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே தீண்டாமை எனும் கொடிய எண்ணத்தில் இருந்து தமிழகம் விடுபடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.