கான்பூர்: உத்தரபிரதேசத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா (58), வழக்கம் போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயக்கமடைந்தார். அவரை அங்கிருந்து மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். சுயநினைவு அற்ற நிலையில் உள்ள ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரது மகள் அந்தரா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘வழக்கம் போல் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டார். ஆனால் திடீரென தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை முன்பை விட தற்போது மேம்பட்டு வருகிறது. அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்’ என்றார்.