ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து போர் நடைபெற்றுவரும் நிலையில், `போர் குறித்து செய்தியாளர்களிடம் எதையும் பகிர வேண்டாம்’ என ராணுவ அதிகாரிகளுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
முன்னதாக கடந்த செவ்வாயன்று கிரிமியாவில், ரஷ்ய ராணுவ தளத்தின் மீது பெரும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்திருக்கிறது. பின்னர் இந்த தாக்குதல் குறித்து வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தித்தாள்கள், அடையாளம் தெரியாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி உக்ரேனியப் படைகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறியது. ஆனால், உக்ரைன் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போர்த்திட்டம் மற்றும் அதன் அறிக்கைகள் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதில் பேசிய ஜெலன்ஸ்கி, “போர் என்பது நிச்சயமாக வீண் மற்றும் உரத்த அறிக்கைகளுக்கானவையல்ல. நம்முடைய பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து நீங்கள் எவ்வளவு குறைவான விவரங்களை வெளியிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு நம் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
தலைப்புச் செய்திகளை நீங்கள் உருவாக்க விரும்புவது, வெளிப்படையாகவே ஒரு பொறுப்பற்ற செயலாகும். தற்காப்பு மற்றும் எதிர்த்தாக்குதல் திட்டங்கள் பற்றி நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும், உங்களுடைய பொறுப்பு என்னவென்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதுவொருபுறமிருக்க, உக்ரைனும் ரஷ்யாவும், உக்ரைனிலுள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்துக்கருகில் நேற்று ஷெல் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.