ஐ.நா.,வில் இந்தியா அளித்த முன்மொழிவை மீண்டும் நிறுத்தி வைத்து சீனா சேட்டை| Dinamalar

நியூயார்க்: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அஸாரின் சகோதரரும், அந்த அமைப்பின் துணை தலைவருமான அப்துல் ரவுப் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா – அமெரிக்கா அளித்த கூட்டு முன்மொழிவை சீனா நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2008 நவம்பரில், மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உலகையே அதிர்ச்சி அடைய செய்த இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். இவரது சகோதரர் அப்துல் ரஹ்மான் மக்கியை, அமெரிக்கா தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்தது.

இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து தடுப்பு பட்டியலில் சேர்க்க, இந்தியா – அமெரிக்கா முடிவு செய்தன. இது தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஜூனில் ஒரு முன்மொழிவை அளித்தன. இதை, சீனா கடைசி நேரத்தில் நிறுத்தி வைத்தது. இது தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 9ம் தேதி பேசிய ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், சீனாவுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்தார்.இந்தியா கண்டனம் தெரிவித்த மறுநாளே, மேலும் ஒரு முன்மொழிவை சீனா நிறுத்தி வைத்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அஸாரின் சகோதரரும், அந்த அமைப்பின் துணை தலைவருமான அப்துல் ரவுப் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முன்மொழிவை, இந்தியா – அமெரிக்கா நேற்று முன்தினம் கூட்டாக தாக்கல் செய்தன. இதை சீனா நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவால் கைது செய்யப்பட்ட மசூத் அஸாரை விடுவிக்க, 1999ல் ‘இந்தியன் – ஏர்லைன்ஸ்’ பயணியர் விமானம் கடத்தப்பட்டதில் அப்துல் ரவுப் அஸார் மூளையாக செயல்பட்டார்.

இவரை, 2010ல் அமெரிக்கா தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்தது.’சர்வதேச பயங்கரவாதிகள் மீது தடை விதிக்கும் நடவடிக்கைக்கு, இரண்டு முறை முட்டுக்கட்டை போட்டதன் வாயிலாக, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சீனா போடும் இரட்டை வேடம் மிக தெளிவாகி தெரிகிறது’ என, இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.