ஒரே நாடு… ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் வருகிறது ‘கியூட்’ தேர்வுடன் ‘நீட்’ – ‘ஜேஇஇ’ தேர்வுகள் இணைப்பு: பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவால் திருப்பம்

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்ற அடிப்படையில் கியூட் நுழைவுத் தேர்வுடன் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை இணைக்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளதால் கல்வித் துறையில் முக்கிய திருப்பம் ஏற்பட வாய்புள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்லைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான ‘கியூட்’ (CUTE) நுழைவுத் தேர்வை எழுதுவது கட்டாயம். நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றில் சேர விரும்பும் மாணவர்கள், ‘கியூட்’ நுழைவுத் தேர்வின் மூலமே வெற்றிப் பெற்று தாங்கள் விரும்பும் படிப்புகளை படிக்க முடியும். அதேபோல் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ‘ஜேஇஇ’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு  கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவப் படிப்பில் சேர ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே மருத்துவ படிப்பில் சேரமுடியும். இதற்கெல்லாம் அடிப்படை தகுதியாக பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேரவிரும்பும் மாணவர்கள் நீட் அல்லது ஜேஇஇ தேர்வுகள் எழுத வேண்டும் என்பதால், ஏதாவது ஒரு பாடத்தில் மட்டுமே கவனம் செலுத்தி படிக்க வேண்டியுள்ளது. அதனால் ‘கியூட்’ நுழைவுத் தேர்வுடன் ‘நீட்’ மற்றும் ‘ஜேஇஇ’ நுழைவுத் தேர்வுகளை இணைக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் கூறுகையில், ‘பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளை பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு – இளநிலைப் பட்டப்படிப்பில் (CUET-UG) இணைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதாவது கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்களை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் மூன்று விதமான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை தவிர்க்க ஒருமுறை தேர்வெழுதி, வெவ்வேறு துறைகளுக்குத் தகுதி பெற முடியும். இதுதொடர்பாக உயர்கல்வித்துறையுடன் ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ஓஎம்ஆர் அடிப்படையில் மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். அந்த  தேர்வை கணினி அடிப்படையிலான தேர்வாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுகின்றன’ என்றார்.யுஜிசியின் இந்த முடிவால் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ஒருங்கிணைக்க முடியுமா, மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேற்கண்ட மூன்று விதமான நுழைவுத் தேர்வுகளை சுமார் 43 லட்சம் பேர் எழுதுகிறார்கள். பெரும்பாலான மாணவர்களில், குறைந்தது இரண்டு தேர்வுகளை எழுதுகிறார்கள். பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை தேர்வு செய்தவர்கள், ஜேஇஇ (மெயின்ஸ்)க்கு கணிதத்தை அடிப்படையாகவும், இளநிலை நீட் படிப்புக்கு உயிரியல் பாடத்தை அடிப்படையாக கொண்டு விண்ணப்பிக்கின்றனர்.அனைத்துப் பாடங்களுக்கும் ஒரே ‘கியூட்’ பாடத் திட்டத்தை வகுக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மூன்று படிப்புகளில் எதில் வேண்டுமானாலும் சேர முடியும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவிக்கிறது. ஆனால், இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆக. 3வது வாரம் நீட் ரிசல்ட்இளங்கலை நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடத்தப்பட்டது, மொத்தம்  18.72 லட்சம் பேர் தேர்வெழுதினர். நாடு முழுவதும் 497 நகரங்கள்,  வெளிநாடுகளில் 14 நகரங்கள் என 3,570 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்? என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில்  இளங்கலை நீட் தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.