சென்னை: காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை விமானம் மூலம் அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டுவரப்படுகிறது.
காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் மதுரை மாவட்டம், து.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை விமானம் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்படுகிறது. ராணுவ வீரர் உடல் நாளை இரவு 1.05 மணிக்கு விமானம் டெல்லியில் இருந்து காலை 4 மணிக்கு ஹைதராபாத் கொண்டு வரப்படுகிறது. இதன்பிறகு ஹைதராபாத்தில் இருந்து காலை 10:20 மணிக்கு புறப்பட்டு 11:50 மணிக்கு மதுரை விமான நிலையம் கொண்டுவரப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர், காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை வழியாக சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது.