குஜராத் சட்டமன்ற தேர்தல்… வாக்காளர்களை கவர காங்கிரஸ் கையில் எடுத்துள்ள அஸ்திரம்!

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அவரது வலதுகரமாக அறியப்படும் அமித் ஷாவின் சொந்த மாநிலமாகவும், பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாகவும் இருப்பதால் அங்கு இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது பாஜக.

பாஜகவின் கோட்டையை இந்த முறை எப்படியாவது தகர்த்தெறிந்தே ஆக வேண்டும் என்ற துடிப்பில் களமிறங்கி உள்ளது காங்கிரஸ். தற்போது அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும்
காங்கிரஸ்
, அரியணையில் ஏற வாக்காளர்களை கவரும் நோக்கில் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது.

இதிலொரு முக்கிய அம்சமாக விவசாயிகளை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி வீசியுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ள காங்கிரஸ், வேளாண் விலை பொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக, வாங்குவதை தடை செய்யும் சட்டமும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்னும் அங்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகதிஷ் தாக்கூர் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பாஜக, காங்கிரஸ் என தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் குஜராத்தில் இந்த முறை ஆம் ஆத்மியும் களம் காண்பதால் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மியும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை என வெகுஜென மக்களை கவரும் விதமாக இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை அள்ளிவீசி உள்ளதால், காங்கிரஸுக்கு அக்கட்சி செம டஃப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை ஆம் ஆத்மி தட்டிப் பறித்த நிலையில், குஜராத்திலும் இக்கட்சி காங்கிரஸுக்கு நெருக்கடியை தர வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவவுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலில், அம்மாநில மக்கள் மீண்டும் பாஜகவுக்கே வாய்ப்பு தருவார்களா? அல்லது காங்கிரஸுக்கோ , ஆம் ஆத்மிக்கோ தங்களை ஆட்சி செய்யும் அதிகாரத்தை அளிப்பார்களா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.