மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக 400 பக்கம் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் 2 ஆண்டுக்கு முன்பு கரோனா ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக, சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
விசாரணை என்ற பெயரில் இருவரையும் அடித்து கொலை செய்ததாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர், 5 காவலர்கள் என 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது. இந்த 9 பேரும் கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதுவரை 37 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று (ஆக.11) நேரில் சென்று அங்கு ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டிருந்த சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் அறையை திறந்து ஆவணங்களை எடுத்துச் சென்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை தாக்குவதற்கு போலீஸார் பயன்படுத்தி மர டேபிளையும் சிபிஐ அதிகாரிகள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இதனிடையே, சாத்தான்குளம் வழக்கில் கூடுதலாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று (ஆக.12) நீதிபதி நாகலெட்சுமி முன்பு தாக்கல் செய்தது.
இந்த குற்றப் பத்திரிகையில் ஜெயராஜை விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸார் அழைத்துச் சென்ற வீடியோ பதிவுகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இருவரிடம் உடலில் இருந்த ரத்தக்கறை, ரத்தக்கறை படிந்த ஆடைகள் மாற்றப்பட்டது தொடர்பாக வீடியோ பதிவுகள், தடயவியல் ஆய்வு முடிவுகள் இடம்பெற்றுள்ளன.
பின்னர் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பென்னிக்ஸின் செல்போன் அழைப்பு விபரங்களை அளித்த செல் நிறுவன அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியளித்தார்.