ஜம்மு காஷ்மீரில், இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அடுத்த நாளே, புலம் பெயர் தொழிலாளி ஒருவர் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் நடந்ததாக கூறப்படும் சோத்னாரா சும்பல் என்ற இடத்தில், தீவிரவாதிகள் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். இதில் சிக்கி, பலத்த காயமடைந்த புலம்பெயர் தொழிலாளி, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர், பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியென்றும், இவரின் பெயர் முகமது அம்ரேஸ் என்றும் தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல போலீஸ், “பண்டிபோராவின் சோத்னாரா சும்பலில், பீகாரைச் சேர்ந்த முகமது அம்ரேஸ் மீது நேற்றிரவு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமடைந்த முகமது அம்ரேஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு பின்னர் அங்கு உயிரிழந்தார்” என இன்று காலை ட்வீட் செய்திருக்கிறது.
முன்னதாக ஒருநாளைக்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில், இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தில், தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.