திமுகவை டேமேஜ் செய்த அண்ணாமலை – மு.க.ஸ்டாலினுக்கு பாஜக நெருக்கடி!

ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தனது நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள். ஆனால் இங்கோ, சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என்று மேடைக்கு மேடை பேசுவதும், தமக்குத் தாமே சமூகநீதி காவலர் என்ற பட்டங்களைச் சூட்டிக் கொள்வதை வாடிக்கையாகவும் கொண்டுள்ளனர் திமுக தலைவர்கள்.

சமீபத்தில் சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் திருமதி சுதா வரதராஜி அவர்கள் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தைச் சொல்லி சுதந்திர தினத்தன்று நமது தேசியக் கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தது.

இதனையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருடன் நமது மாநில துணைத் தலைவர் திரு MC சம்பத் அவர்கள் திருமதி சுதா வரதராஜி அவர்களை நேரில் சந்தித்த பிறகு, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஊராட்சி தலைவர் திருமதி சுதா வரதராஜி அவர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற தீர்வு எட்டப்பட்டுள்ளது. தமிழக தீண்டாமை ஒழிப்பு இயக்கம் நடத்திய கணக்கெடுப்பில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

24 மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்குச் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அது மட்டுமல்லாது 22 ஊராட்சிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு அமர இருக்கை மறுக்கப்பட்டு தரையில் அமர்த்தப்படுகிறார்கள்.

42 ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர்களின் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இங்கு அமர்ந்து கொண்டு உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது; பீகாரில் என்ன நடக்கிறது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் சிலர், தமிழகத்தில் சம உரிமையோடு அனைத்து மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற மாயையில் இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதைச் சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தி உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.