தெலுங்கு படவுலகில் கடந்த 1ம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டு பத்து நாட்களுக்கும் மேலாக ஸ்ட்ரைக் நடந்துவருகிறது. இப்போது அங்கே நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்து தெலுங்கு பட வட்டாரத்தில் விசாரித்தேன்.
தெலுங்கு பட உலகில் `பாகுபலி’, `ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற ஒருசில படங்களைத் தவிர, பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட தியேட்டர்களில் ஓடுவதில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஹீரோ உள்பட நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்த திரையுலகினரின் சம்பளத்தை குறைப்பது, படத்தின் பட்ஜெட்டை குறைப்பது குறித்து கடந்த சில மாதங்களாகவே அங்குள்ள தயாரிப்பாளர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தன. ஒருகட்டத்தில் அது ஸ்டிரைக்காக அறிவிக்கப்பட்டது. ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை முதலிலேயே வாங்கிக் கொள்ளக்கூடாது. குறிப்பிட்ட சதவிகிதத்தை அட்வான்ஸாக வாங்கிக் கொள்ளலாம். அதன்பிறகு முழுப்படமும் முடிந்த பின்னரே சம்பளத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளையும் வைத்திருந்தனர்.
ஸ்டிரைக்கை முன்னிட்டு தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததில், ஸ்டிரைக் தொடங்கிய ஒருசில நாட்களில் சின்னப் பட்ஜெட் படங்கள் மற்றும் வெப்சீரீஸ்களின் படப்பிடிப்புகள் நடக்க ஆரம்பித்தன. இந்நிலையில் வருகிற 15ம் தேதி அதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்டிரைக்கை வாபஸ் பெறுகின்றனர். பட்ஜெட்டைக் குறைப்பது குறித்த பேச்சு வார்த்தையிலும் முடிவு எட்டியுள்ளது. ஆக, 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்குமென எதிர்பார்க்கப்படுவதாக முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
விஜய்யின் ‘வாரிசு’, தனுஷின் ‘வாத்தி’, சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ ஷங்கரின் ‘ஆர்.சி-15’ ஆகிய பட வேலைகள் அங்குதான் நடந்து வந்தன. ஸ்டிரைக் வாபஸ் பெற்றதும், விஜய்யின் ‘வாரிசு’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி வைசாக்கில் நடைபெறும் என்கிறார்கள்.