புதுடெல்லி: ‘‘தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதிகளும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை’’ என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து தரப்பினரின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களையும் கேட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி, அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் நீதிபதி கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் விவேகமற்ற இலவச வாக்குறுதிகளை அறிவிப்பது மிகவும் கடுமையான விஷயம்.இலவசங்களும், சமூக நலத்திட்டங் களும் வெவ்வேறானவை. பொருளாதார பாதிப்புக்கும், மக்கள் நலத்திட்டத்துக்கும் இடையே சமநிலை தேவை. அதனால்தான் இந்த விஷயம் குறித்து விவாதம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தங்களின் கருத்துக்களை அனைத்து தரப்பினரும், நான் ஓய்வுபெறும் ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு முன்பு தெரிவிக்கலாம்.
இலவச் வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை நான் விரும்பவில்லை. இது ஜனநாயகமற்ற கருத்து. சட்டம் இயற்றுவது தொடர்பான விஷயங்களையும் நான் ஆக்கிரமிக்க விரும்பவில்லை. இது எளிதான விஷயம் அல்ல. கடுமையான விஷயம். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்போம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்கலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஆலோசனை தெரிவித்திருந்தது. இது தொடர்பாக கடந்த 10-ம் தேதிகூடுதல் பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை வரவேற்பதாக தெரிவித்திருந்தது. மேலும், குழுவில் உச்ச நீதிமன்றமும் இடம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
தலைமை நீதிபதி கண்டிப்பு
தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனு குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தேர்தல் ஆணையத்தின் பதில்மனு நீதிபதிகளுக்கு கிடைக்கும் முன் செய்திதாள்களுக்கு சென்றுவிட்டது’’ என்று கடுமையுடன் கூறினார்.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையத்தின் மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், ‘‘இந்த பதில்மனு ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் நகல்கள் மற்றவர்களுக்கும் அனுப்பப்பட்டது’’ என்றார்.