புதுடெல்லி: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜிரிவால் நேற்று கூறியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் ரூ.20 லட்சம் கோடியாக இருந்தது. இது இப்போது ரூ.40 லட்சம் கோடியாகி உள்ளது. மத்திய அரசு ஒரு புறம் பணக்காரர்கள் மற்றும் தங்களது நண்பர்களின் கடனை தள்ளுபடி செய்ய ரூ.10 லட்சம் கோடியை செலவிட்டதுடன் பெரிய நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரியை தள்ளுபடி செய்துள்ளது. மற்றொரு புறம் ஏழைகள் வாங்கும் உணவுப் பொருட்கள் மீது வரி விதிக்கிறது. ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பணமில்லை எனக் கூறி அக்னிபாதை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
இதற்கு பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா ட்விட்டரில் கூறுகையில், “கேஜ்ரிவால் கூறுவது எல்லாம் பொய். பணக்காரர்களின் கடனை அரசு தள்ளுபடி செய்யவில்லை. மாறாக, 2014 முதல் இதுவரை ரூ.6.5 லட்சம் கோடி வாராக் கடன் வசூலாகி உள்ளது. ராணுவ வீரர்களின் ஓய்வூதிய பட்ஜெட்டை மத்திய அரசு குறைக்கவே இல்லை’’ என்று தெரிவித்தார்.