பதிவெண் பலகையின் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறதா போக்குவரத்துத் துறை?

சென்னை: வாகன பதிவெண் பலகைக்கான வரன்முறையை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பின்பற்றாத நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை தயக்கம் காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 3 கோடிக்கும் அதிகமான மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் பதிவெண் பலகையில் எழுத்து மற்றும் எண்கள் இடம் பெறுவதற்கான விதிமுறைகள், மோட்டார் வாகனச் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதனை மீறினால் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அபராதம் என்பதற்கும் மேலாக விபத்து நேரும் பட்சத்தில் பதிவெண் தெளிவாக இருந்தால் மட்டுமே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பை ஏற்படுத்திய நபர்களின் விபரம் தெரியவரும்.

இதனை அறியாமல் பதிவெண் பலகையை விளம்பர பலகையாகவும், அறிவிப்பு பலகையாகவும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள், அரசுத் துறை அதிகாரிகள் என முக்கிய பொறுப்பில் இருப்போரும் சமூக பொறுப்பின்றி, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உயர் பாதுகாப்பு பதிவெண் பலகை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வாகனம் வாங்கும்போதே விநியோகஸ்தர் மூலம் அரசின் விதிகளுக்கு உட்பட்டு பதிவெண் பலகை வழங்கப்படுகிறது.

அதன் பிறகு தற்போது வரை சுமார் 50 லட்சம் வாகனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2019-க்கு முன் பதிவு செய்யப்பட்ட 2.50 கோடி வாகனங்களில் பெரும்பாலானவற்றிலேயே இதுபோன்ற விதிமீறல் அதிகளவு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான விதிமீறலைத் தடுப்பதற்கான நடவடிக்கை குறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறும்போது, “வாகன பதிவெண் பலகை விதிமீறல் உள்ளிட்ட மோட்டார் வாகன விதிமீறல் குறித்து மாதந்தோறும் சோதனை நடத்தப்படுகிறது. அவ்வப்போது திடீர் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சிக்குவோரிடம் இருந்து ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுவதோடு, விதிகளை விளக்கி எச்சரிக்கை விடுத்தும் அனுப்புமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும் தகுதிச்சான்று பெற வருவோரின் வாகனங்களில் இதுபோன்ற விதிமீறல் இருந்தால் சான்று வழங்கக் கூடாது எனவும் கூறியுள்ளோம்.
தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுவோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றனர்.

விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்போது உள்ள சிக்கல் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் கேட்டபோது, “எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது அரசியல் பிரமுகர்கள் தான்.

விதிமீறலில் சிக்கியவர்களுக்கு அரசியல் பிரமுகர்களுடன் சிறிய தொடர்பு இருந்தால் கூட அபராதம் விதிக்கும் முன் உயரதிகாரிகளிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வரும். இதனாலேயே எங்களது கண்டிப்பை அரசியல் தொடர்பில்லாமல் உள்ள வெகு சிலரிடம் மட்டுமே வெளிக்காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றனர்.

விதிமீறும் வகைகள் பதிவெண் பலகையில்…

# எண் கணிதப்படி ராசியான எண்ணை பெரிதாகவும் மற்றவற்றை சிறியதாகவும் எழுதுகின்றனர்.
# தமிழ் ஆர்வலராகக் காட்டிக் கொள்ள தூய தமிழில் பதிவெண் எழுதுகின்றனர்.
# கத்தி, வீச்சரிவாள், துப்பாக்கி போன்றவை இடம்பெறுகின்றன.
# அரசு அதிகாரிகள் பணியாற்றும் துறையை எழுதுகின்றனர்.
# கட்சியின் சின்னம், சுவாமி படங்கள், அன்புக்குரியவர்களின் படங்களை ஒட்டுகின்றனர்.
# பதிவெண்ணில் முதல் மூன்று இலக்கம் 0 ஆக இருந்தால், அதைச் சேர்த்து எழுதாமல் 4-வதாக உள்ள எண்ணை மட்டும் பெரிதாக எழுதுகின்றனர்.
# 8055 என்ற எண்ணை BOSS என எழுதுகின்றனர்.

மோட்டார் வாகன சட்ட விதிகள்

மோட்டார் வாகனச் சட்டத்தின் (1989) விதிகள் 50, 51 ஆகியவற்றின் கீழ் 70 சிசி-க்கு அதிகமான மோட்டார் சைக்கிள்களின் முன்புறம், 30 மிமீ உயரம், 5 மிமீ தடிமன், 5 மிமீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் மற்றும் எண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இந்த வாகனங்களின் பின்புறம் 35 மிமீ உயரம், 7 மிமீ தடிமன், 5 மிமீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகளும், 40 மிமீ உயரம், 7 மிமீ தடிமன், 5 மிமீ இடைவெளியுடன் கூடிய எண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அனைத்து 4 சக்கர மோட்டார் வாகனங்களிலும் முன்புறமும், பின்புறமும் 65 மிமீ உயரம், 10 மிமீ தடிமன், 10 மிமீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் இடம்பெற வேண்டும். குறிப்பாக சொந்த வாகனமாக இருந்தால் வெள்ளை பலகையில் கறுப்பு நிறுத்திலும், வணிக வாகனமாக இருந்தால் மஞ்சள் பலகையில் கறுப்பு நிறுத்திலும் எழுத வேண்டும். அவை தெளிவாக இருப்பது கட்டாயம்.

அபராதம் விதிப்பு

மோட்டார் வாகனச் சட்டத்தில் வழங்கப்பட்ட வரன்முறைகளைத் தவிர பதிவெண் பலகையில் இடம்பெறும் கூடுதலான எழுத்து கூட விதிமீறல் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்க முடியும். முதன் முறை ரூ.500, அடுத்த ஒவ்வொரு முறையும் ரூ.1,500 அபராதம் விதிக்க முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.