பாஜகவின் புதுச்சேரி ஆப்பரேஷன்; பல்லை உடைக்க ரங்கசாமி ப்ளான்!

தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இதன் மூலம் 4 எம்எல்ஏக்களை மட்டுமே பாஜகவால் உருவாக்க முடிந்தது.

அதே சமயம் தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்து போட்டியிட்டது. இதில் பாஜக மொத்தமாக 5 சதவீத வாக்குகளை பெற்றது.

இதன் மூலம், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி எக்கச்சக்கமாக உயர்ந்து இருப்பதாக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

ஆதீனம் அனுப்பிய செங்கோல், அடையாளப்படுத்தபட்ட சுதந்திரம் – திருவாடுதுறை ஆதீனம் பேட்டி!

ஆனால் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டால் தனது சாயம் வெளுத்துவிடும் என்பது பாஜகவுக்கு நன்றாக தெரியும் என்பதால் கூட்டணியே கதி என்ற நிலை உள்ளது.

புதுச்சேரியை பொறுத்தவரை முதல்வர் ரங்கசாமி தலைமையில், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணியில் இருந்தாலும் கடந்த ஓராண்டாகவே முதல்வர் ரங்கசாமிக்கும், பாஜக தரப்புக்கும் இடையே முட்டல் மோதல் போக்கே நிலவி வருகிறது.

பாஜக என்றாலே அண்ணன், தம்பி போல் பழகுவது, பின்னர் சொல் பேச்சை கேட்கா விட்டால் அவர்களது கழுத்தில் உட்கார்ந்து, காதை குடைந்து விடுவது. இதுவே பாஜகவின் சுபாவம்.

இந்த பார்முலாவை தான் பல்வேறு மாநிலங்களில் பாஜக அரங்கேற்றி வருகிறது. பாஜகவின் இந்த பார்முலாவை தகர்த்து எறியும் விதமாக, பீகாரில் நிதீஷ்குமார் பதவியை ராஜினாமா செய்துவிட்டு லல்லுபிரசாத் யாதவ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்.

இந்த சூழ்நிலையில் நிதீஷ் குமாரை போல புதுச்சேரியிலும், பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட ரங்கசாமி முன்வர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் திமுகவை சேர்ந்த சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே ரங்கசாமிக்கும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், சிவா விடுத்திருக்கும் கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்து பாஜகவின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார்.

கூட்டணி விவகாரத்தில், ஜெயலலிதாவுக்கே டிமிக்கு கொடுத்த அரசியல் அனுபவம் ரங்கசாமிக்கு உள்ளது. எனவே, ரங்கசாமியை முழுவதுமாக நம்ப முடியாது என பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது.

இதனால் ரங்கசாமி விழித்துக் கொள்வதற்கு முன்பாக, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை துவம்சம் செய்து விட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயம், பாஜக புலிப்பாய்ச்சல் போடும் பட்சத்தில் பல்லை உடைத்து கையில் கொடுக்க ரங்கசாமி தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசியலில் அனல் பறக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.