பாட்னா: பீகாரில் பாஜ.வுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தலைவரான நிதிஷ் குமார் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தார். தனது கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்க்க பாஜ முயற்சி செய்ததால், அதன் கூட்டணியை நேற்று முன்தினம் திடீரென முறித்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 7 கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். அவர் நேற்று முன்தினம் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றார். இம்மாநில சட்டப்பேரவை சபாநாயகராக பாஜ.வை சேர்ந்த விஜய்குமார் சின்கா உள்ளார். இவர் தனக்கு தொல்லையாக இருப்பார் என்பதால், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்காக, மெகா கூட்டணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்காக, இக்கூட்டணி எம்எல்ஏ.க்கள் நேற்று நோட்டீஸ் கொடுத்தனர். இது குறித்து ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் விஜய்குமார் சவுத்ரி கூறுகையில், ‘‘முதல்வர் நிதிஷ் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக வரும் 24 அல்லது 25ம் தேதி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடக்கிறது. இதில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும்,’ என்றார்.