பைனான்சியர் வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பைனான்சியர் மற்றும் அவரது மகன்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி திருவள்ளூர் நகர் பகுதியில் வசிப்பவர் விசுவநாதன் (65). இவர் பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் இதே பகுதியைச் சேர்ந்த விவசாயியும், லால்குடி நகராட்சியின் 9 வது வார்டு திமுக கவுன்சிலருமான ஆறுமுகம் என்ற செந்தில்குமார் அவரது 6 ஏக்கர் விவசாய நிலத்தின் பத்திரங்களை அடமானமாக வைத்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை மூன்று பைசா வட்டிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெற்றுள்ளார்.
தற்போது அசலுடன் வட்டியும் சேர்த்து ரூபாய் 2 கோடியே 20 லட்சம் கொடுத்தால்தான் நிலத்தின் பத்திரங்களை கொடுக்க முடியும் என மிரட்டி வந்துள்ளார் பைனான்ஸ் விசுவநாதன். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்(ஐஜி) சந்தோஷ் குமாரிடம் நேரில் புகார் அளித்தார். இவர் புகார் அளித்தது போல லால்குடி, பெருவெள்ளநல்லூர், வெள்ளனூர், புள்ளம்பாடி, இடையாற்று மங்கலம், ஆங்கரை போன்ற பகுதிகளில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஏழை எளியோர் போன்ற 100-க்கும் மேற்பட்டோர் தங்களது நிலத்தின் பத்திரங்களை அடமானமாக வைத்து வட்டிக்கு பணம் பெற்றுள்ளனர்.
பணம் பெற்றுள்ளவர்களிடம் உரிய வட்டி கொடுத்தால் மட்டுமே பத்திரங்களை கொடுக்க முடியும் என மிரட்டியதின் அடிப்படையில் செந்தில்குமார் போன்ற பாதிக்கப்பட்டவர்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் டிஜிபி அலுவலகம், திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட போலீஸ் ஐஜி உள்ளிட்டோருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் லால்குடி நகராட்சி திமுக கவுன்சிலர் ஆறுமுகம் என்ற செந்தில்குமார் கொடுத்த புகார் மற்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில், திருச்சி மத்திய மண்டல ஐஜி உத்தரவின் கீழ் திருச்சி மாவட்ட காவல்துறை ஏடிஎஸ்பி குந்தலிங்கம் தலைமையில் லால்குடி டிஎஸ்பி மற்றும் திருச்சி மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பி ஐந்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் திருவள்ளுவர் நகரில் உள்ள பைனான்ஸ் விஸ்வநாதன் வீட்டில் ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டில் இரண்டு பைகள் நிறைய 100 கோடி மதிப்புள்ள நில அடமானத்தின் பத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். செந்தில்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பைனான்ஸ் விசுவநாதன் மற்றும் அவரது மகன்கள் விவேக், வினோத் ஆகிய மூவர் மீதும் லால்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். மேலும் இவரது ஊழியர்கள் இருவரை பிடித்த போலீசார் லால்குடி காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பைனான்ஸ் விஸ்வநாதன் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பேருந்துகளில் நேர காப்பாளராக வேலை செய்துவந்த நிலையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் மூலமாக லால்குடி புள்ளம்பாடி பத்திரப்பதிவு அலுவலகங்களிn எல்லைக்குட்பட்ட பகுதியில் வணிக வளாகங்கள், கடைகள், விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் என 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இவரிடம் தற்போது இருப்பதாக இவரால் பாதிக்கப்பட்டவர்கள் கூறி வருகின்றனர்.
இவரது குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியில்தான் லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM