தூத்துக்குடி: “டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். தமிழக முதல்வரும், படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை எல்லாம் சுலபமாக மறந்துவிட்டார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “போதைத் தடுப்பு என்பது மிகத் தீவிரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை. இது இன்றைய இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் போதைப் பழக்கமானது அதிகமாகி கொண்டிருக்கிறது. இது வருத்தமளிக்கிறது. இதனை இரும்புக்கரம் கொண்டு நாம் ஒடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக அரசாங்கம் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதேபோல், டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். தமிழக முதல்வரும், படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். ஆனால், அது என்னாச்சு என்று தெரியவில்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை எல்லாம் சுலபமாக மறந்துவிட்டார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து” என்று அவர் கூறினார்.