போதை ஒழிப்பில் மது வராதா? தமிழக அரசுக்கு விஜயகாந்த் கேள்வி!

2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? என தேமுதிக தலைவர்

வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் எனவும் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருப்பதை வரவேற்கிறேன். இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிறு வயதிலேயே தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். எனவே புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். அதேபோல் மதுபானங்களால் ஏற்படும் போதையை ஒழிக்க தமிழக அரசு முன்வராதது ஏன்? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருமானத்தை விட மனம் இல்லாததால் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறும் வாய்மொழி வார்த்தையாக இல்லாமல் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கஞ்சா, மதுபானங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.