பாட்னா: பிஹாரில் பாஜக உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் முறித்துக் கொண்டார். இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து நேற்று முன்தினம் ஆட்சி அமைத்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவே நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டதாக பாஜக விமர்சித்தது. இதனை நிதிஷ் குமார் மறுத்தார். தனக்கு அத்தகைய விருப்பம் இல்லை என்றார்.
இதுகுறித்து பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நேற்று கூறும்போது, “நிதிஷ் குமார் நிர்வாக அனுபவம், சமூகஅனுபவம் கொண்டவர். மாநிலங்களவை தவிர மற்ற அனைத்து அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மோடி பிரதமராகும் போது, நிதிஷ் குமார் ஏன் பிரதமராக கூடாது?” என்றார்
தேஜஸ்வி மேலும் கூறும்போது, “மத்திய விசாரணை அமைப்புகள் எனது வீட்டிலேயே அலுவலகம் தொடங்கலாம். சோதனைக்காக ஏன் 2 மாதங்களுக்கு ஒரு முறை வருகிறீர்கள்? நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்தது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல. தன்னிச்சையாக நடந்தது’’ என்று தெரிவித்தார்.