நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011-16, 2016 – 21 வரை இருமுறை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி.பாஸ்கர். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் நமக்கல் தொகுதியில் நின்று, தி.மு.க ராமலிங்கத்திடம் தோல்வியை தழுவினார். அதோடு, இவர், அ.தி.மு.க நாமக்கல் நகரச் செயலாளராகவும் இருக்கிறார். இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4.72 கோடி வரை சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்த லஞ்சஒழிப்புத்துறையினர், இவர் சம்பந்தப்பட்ட 26 இடங்களில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில், நாமக்கல்லில் 24 இடங்கள், மதுரை திருப்பூரில் தலா 1 இடம் என லஞ்சஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் அவரின் பெயரிலும், அவரின் மனைவி உமா பெயரிலும், பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார்.
மேற்படி ,வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315% அதிகமாகும். எனவே, இது சம்பந்தமாக அவர்கள் மீது 11.08.2022 ஆம் தேதி நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்துவருகிறது. மேலும். இவ்வழக்கு மேற்படி வழக்கின் விசாரணை தொடர்பாக, கே.பி.பி..பாஸ்கர் மற்றும் அவரின் உறவினர்கள், அவரின் அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால், இன்று 12.08.2022 – ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.