வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில், விபத்தில் சிக்கிக்கொண்ட நபரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் துணை கொண்டு மொபைல் ஆப் மூலம் உதவி கூறும் புதிய படைப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் விதமாக வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நெல்லை மாவட்டம் காந்திநகர் பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் பப்ளிக் பள்ளியில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 40 பள்ளிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 210 புதிய அறிவியல் படைப்புகளை மாணவர்கள் உருவாக்கி காட்சிப் படுத்தியிருந்தனர்.
நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமார் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் ஜூனியர் பிரிவிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சீனியர் பிரிவிலும் பங்கேற்று தங்களது புதிய படைப்புகளை காட்சிப் படுத்தியிருதனர்.
இதில் கண் பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் முன்னால் உள்ள வழி குறித்து ஒலி எழுப்பி உதவும் கருவி, விபத்தில் சிக்கிக்கொண்ட நபரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் துணை கொண்டு மொபைல் ஆப் மூலம் உதவி கூறும் புதிய படைப்பு, ரயில் வழித்தடங்களில் விபத்துகளை தவிர்க்க தானாக இயங்கும் கருவி என பல்வேறு கண்டுபிடிப்புகள் மாணவ மாணவிகளால் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஜூனியர் பிரிவில் 120 படைப்புகளும், சீனியர் பிரிவில் 86 படைப்புகளும் போட்டிக்கு வந்திருந்தன. இதில் ஜூனியர் பிரிவில் தேர்வாகும் மூன்று அறிவியல் கண்டுபிடிப்புகளும், சீனியர் பிரிவில் வெற்றி பெறும் மூன்று அறிவியல் கண்டுபிடிப்புகளும் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM