`20 ரூபாய் பாக்கி… 22 ஆண்டுக்கால சட்டப்போராட்டம்!' – 120 முறை விசாரணைக்கு ஆஜராகி வென்ற முதியவர்

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்த துங்கநாத் சதுர்வேதி என்பவர் கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மதுரா ரயில் நிலையத்துக்குச் சென்று டிக்கெட் எடுத்தார். ரூ.100 கொடுத்து 70 ரூபாய்க்கான டிக்கெட் எடுத்தார். ஆனால் டிக்கெட் கிளார்க் 70 ரூபாய்க்கு பதில் 90 ரூபாய் பிடித்தம் செய்துவிட்டார். அதிகமாகப் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை ரயில்வே கிளார்க் திருப்பிக் கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இது தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டரிடமும் சதுர்வேதி பேசிப்பார்த்தார். ஆனால் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இதையடுத்து சதுர்வேதி தன் பயணத்தை முடித்துக்கொண்டு ருபாய் இருபதை திருப்பி தர உத்தரவிடக்கோரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் ரயில்வே கிளார்க், மதுரா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் அரசாங்கம் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தது. கடந்த 22 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி ரயில்வே தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

சதுர்வேதி

இது போன்ற மனுக்களை சிறப்பு தீர்ப்பாயத்தில்தான் தாக்கல்செய்யவேண்டும் என்று ரயில்வே தெரிவித்தது. ஆனால் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்த ஒரு தீர்ப்பை மேற்கோள்காட்டி வழக்கை தொடர்ந்து நுகர்வோர் தீர்ப்பாயத்தில் சதுர்வேதி விசாரிக்கச் செய்தார். 22 ஆண்டுக்கால கடினமான சட்டப்போராட்டத்துக்குப் பிறகு இந்த வழக்கில் சதுர்வேதி தற்போது வெற்றிபெற்றிருக்கிறார். 20 ரூபாயை 12 சதவிகித வட்டியுடன் ரயில்வே திருப்பிக் கொடுக்கவேண்டும் என்றும், 30 நாள்களுக்குள் பணத்தை கொடுக்கவில்லையெனில் வட்டி 15 சதவிகிதமாக கணக்கிடப்படும் என்றும் நுகர்வோர் கோர்ட் தெரிவித்தது. மேலும், சதுர்வேதிக்கு ஏற்பட்ட மன உலைச்சலுக்காக ரூ.15,000 வழங்கவும் ரயில்வேவுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்தியன் ரயில்வே

இதில் வெற்றிபெற்றது குறித்துப் பேசிய சதுர்வேதி, “20 ரூபாய்க்காக நான் போராடவில்லை. பொதுமக்களின் நலனுக்காகத்தான் போராடினேன். இது ஒரு நீண்ட சட்டப்போராட்டம். அனைத்து சாட்சிகளும் இருந்தும், விசாரணைக்காக 120 முறை ஆஜராகவேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கை தொடருவது வீண் என்று என்னிடம் என்னுடைய குடும்பத்தினரும், நண்பர்களும் பல முறை கேட்டுக்கொண்டனர். ரயில்வேவும் இந்தப் பிரச்னையை கோர்ட்டுக்கு வெளியில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்பேச்சுக்கு வந்தது. ஆனால் நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருந்தேன்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.