புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு முன்னதாக 11 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், பீகார் பார்முலாவை பயன்படுத்தி ஆளும் பாஜகவுக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இமாச்சலப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டத்துக்கு சென்றுள்ளன. அந்த வகையில் பீகாரில் நடந்த அரசியல் மாற்றங்கள் எதிர்கட்சிகளுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது. அரையிறுதி போட்டிகளாக கருதப்படும் வரும் சட்டப் பேரவை தேர்தல்களில், பீகார் பார்முலாவை பயன்படுத்தி பாஜகவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த காங்கிரஸ் புதிய வியூகங்களை வகுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 11 மாநில தேர்தல்களில் முதற்கட்டமாக இந்தாண்டு நவம்பர் வாக்கில் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இமாச்சல பிரதேசத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறும் என்பதால், தற்போது ஆட்சி நடத்தி வரும் பாஜகவை மக்கள் வீழ்த்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் – பாஜக இடையேதான் கடும் போட்டி இருக்கும். அதற்கடுத்ததாக குஜராத்தில் கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போதைய காங்கிரஸ் நிலைமை அவ்வளவாக சரியாக இல்லை. மாநில அளவில் தலைவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி பிரச்னை, ஆளும் பாஜகவுக்கு சாதகமாகிவிடுகிறது. இந்த நேரத்தில் ஆம்ஆத்மி கட்சி குஜராத்தில் களம் இறங்கியுள்ளது. டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், பல இலவச அறிவிப்புகளை கடந்த சில நாட்களாக குஜராத்தில் அறிவித்து வருகிறார். இதனால் பாஜக நிலைமை பல கேள்விகளை எழுப்பி உள்ளது. காரணம், சமீபத்தில் பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளை ஆம்ஆத்மி வாரிசுருட்டியது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட இருமாநில தேர்தல்கள் முடிந்தவுடன் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும். ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய நிலையில் உள்ளது. மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு மேலும் பலம் கூடும் என்கின்றனர். ஆனால் ராஜஸ்தான், சட்டீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலால் போராடி வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். ராஜஸ்தானில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக மத மோதல்கள் அங்கு அதிகரித்துள்ளதால் காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் இளம் தலைவர் சச்சின் பைலட் இடையேயான பகையும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. காங்கிரசின் பலவீனங்கள் பாஜகவிற்கு ஆதாயத்தை ஏற்படுத்தலாம். சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கும், மூத்த தலைவர் டி.எஸ்.சிங் தியோவுக்கும் (சமீபத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்) இடையிலான மோதல், மாநில தேர்தலில் கட்சிக்கு நெருக்கடியை அதிகரிக்கும். அதேபோல கர்நாடகாவிலும் மாநில தலைவர் சிவக்குமாருக்கும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையிலான மோதலைச் சமாளிப்பது காங்கிரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.மேற்கண்ட மாநில தேர்தல்கள் முடிந்தவுடன் மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும். வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா (பாஜக) தவிர மற்ற மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு காங்கிரசின் நிலைமை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமதி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், இரண்டாம் இடத்தில் யார் என்பதில் பாஜக – காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. எனவே வரும் செப்டம்பர் தொடங்கி அடுத்தாண்டு முழுவதும் 11 மாநில தேர்தலுக்கான காலமாக இருக்கும். அதன்பின் மக்களவை தேர்தலுக்கான வேலைகளை அடுத்தாண்டு டிசம்பர் வாக்கில் அரசியல் கட்சிகள் தொடங்கிவிடும் என்பதால் சட்டப் பேரவை, மக்களவை தேர்தலுக்கான பரபரப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.நிதிஷ் குமாரால் லாபமா? நஷ்டமா? கடந்த 1ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வாக்காளர்களின் மன நிலையை தனியார் கருத்து கணிப்பு நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அந்த சர்வேயின்படி, கடந்த 1ம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 307 இடங்களும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 125 இடங்களும், மற்றவர்களுக்கு 111 இடங்கள் கிடைத்திருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியேறியதால் நிலைமை வேறுவிதமாக மாறியுள்ளது. கடந்த 10ம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 21 இடங்களை இழந்து 286 இடங்களை கைப்பற்றி இருக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூடுதலாக 21 இடங்களைப் பெற்று 146 இடங்களைப் பெற்றிருக்கலாம். மற்றவர்களுக்கு 111 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.